சென்னை: மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல், பொதுமக்கள் இனிமேல் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு  கடந்த 24 மணி நேரத்தில் 86ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதியாகி உள்ளது. இதனால் மொத்த கொரோனா தொற்று பாதிப்பு 40 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை அதில் 31 லட்சத்துக்கும் அதிகமானோர்  கொரோனா தொற்று பாதிப்பில்  இருந்து மீண்ட நிலையில், சுமார் 8 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா பொது முடக்கத்தில் இருந்து 5 மாதங்களுக்கு பிறகு, பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பொதுப்போக்குவரத்து மற்றும் ரயில்  போக்குவரத்துக்கு மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கி உள்ளதால்,  ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி, மாவட்ட, மற்றும் மாநில எல்லைகளில் நடத்தப்படும் கொரோனா சோதனை அகற்றப்பட்டு உள்ளது. மேலும், இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளதால், மக்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இந் நிலையில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே, விருப்பப்படுபவர்கள்  கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதாவது விருப்பமுள்ளவர்கள், வெளி இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, அதன் முடிவுகளை வைத்துக்கொள்ளலாம், இது பயணத்தின்போது, தேவைப்படும் பட்சத்தில் காண்பிக்க ஏதுவாக இருக்கும் என்று குறிப்பிட்டு உள்ளது.

அதே வேளையில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள்,  மத்தியஅரசின் வழிகாட்டுதல் களின்படியே சோதனைகளை நடத்த வேண்டும், எந்தவொரு நபரையும் சோதனைக்கு உட்படுத்து வதை தடை செய்யக்கூடாது என்றும்  ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது.