இந்தியரிடம் இருந்து அகற்றப்பட்ட 7.4 கிலோ எடையுள்ள சிறுநீரகம்

டில்லி

ந்தியர் ஒருவரிடமிருந்து மருத்துவர்கள் 7.4 கிலோ (அதாவது 16.3 பவுண்டுகள்) எடையுள்ள சிறுநீரகத்தை அகற்றி உள்ளனர்.

டில்லியில் வசிக்கும் சுமார் 56 வயதான ஆண் நோயாளி ஒருவர் தொடர்ந்து வயிற்று வலி சிறுநீர் தொற்று உள்ளிட்டவற்றால் சிரமப்பட்டு வந்தார்.  அவர் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  அவருக்கு ஆடோசமல் டாமினண்ட் பாலிகிஸ்டிக் கிட்னி டிசீஸ் என்னும் சிறுநீரக பாதிப்பு நோய் இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நோய் தாக்கியவர்களுக்குச் சிறுநீரகத்தில் நீர்க்கட்டிகள் உண்டாகும்  இதனால் கடுமையான வலி உண்டாகும்.   சிறுநீரகம் செயல்படாது.   எனவே இந்த கட்டியைக் கரைக்க அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த சிகிச்சையில்  நீர்க்கட்டிகள் கரையவில்லை.  எனவே அந்த சிறுநீரகத்தை அகற்ற மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

அதையொட்டி இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை நடத்தி அவருடைய சிறு நீரகத்தை அகற்றி உள்ளனர்.  அகற்றப்பட்ட அந்த சிறுநீரகத்தின் எடை 7.4 கிலோ (16.3 பவுண்டுகள்) ஆகும்.    இது நன்கு வளர்ச்சி அடைந்த சிசுவின் எடையைப் போல் இரு மடங்கு ஆகும்.   அறுவை சிகிச்சை நடந்த 2 மணி நேரத்தில் சிறுநீரகத்தை அகற்ற மட்டும் அரைமணி நேரம் ஆகி உள்ளது.

இவ்வளவு அதிக எடையுள்ள சிறுநீரகம் அகற்றப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறையாகும்.    உலக அளவில் இது மூன்றாம் அதிக எடையுள்ள சிறுநீரகம் ஆகும்.   இதற்கு முன்பு அமெரிக்காவில் 9 கிலோ (19.8 பவுண்டுகள்) மற்றும் நெதர்லாந்தில் 8.7 கிலோ (19.2 பவுண்டுகள்) எடையுள்ள சிறுநீரகங்கள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நோயாளிக்கு தற்போது சிறுநீரக தானம் கிடைப்பதற்காக மருத்துவர்கள் காத்திருக்கின்றனர்.   அவருடைய மற்றொரு சிறுநீரகத்திலும் நீர்க்கட்டிகள் உள்ளதால் செயலிழந்துள்ளது.    டயாலிசிஸ் மூலம் தற்போது வாழ்ந்து வரும் அவருக்கு தானம் அளிப்பவர் கிடைத்த பிறகு மற்றொரு சிறுநீரகம் அகற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி