சென்னையில் குடிநீர் பற்றாக்குறை: பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க மருத்துவர்கள் கோரிக்கை

ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. குடிநீர் வழங்கும் ஏரிகள் வறண்டு விட்டதால் கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுத்து சென்னை நகரத்துக்கு வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 1,100 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால், தற்போது 5,50 மில்லியன் லிட்டர் மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. அதாவது, பாதிக்குப் பாதி என்கிற அளவில் பற்றாக்குறை நிலவுகிறது. சென்னையின் நீர் ஆதாரங்களான செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டுவிட்டன. செங்குன்றம் ஏரி இன்னும் சில நாட்களில் வறண்டுவிடும் நிலையில் உள்ளது. தற்போதைக்கு பூண்டி ஏரி மட்டும்தான் சென்னைக்குக் கைகொடுக்கிறது. இது தவிர, கடந்த ஒருமாதமாக செம்பரம்பாக்கம் அருகில் உள்ள சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து நாள் ஒன்றுக்கு 30 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. அது செம்பரம்பாக்கம் வழியாக நகருக்குள் வருகிறது. ஆனால் இவை எல்லாம் கோடைக்காலத்தை சமாளிக்கும் ஏற்பாடுகள் மட்டுமே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எத்தனை நாட்கள் சமாளிக்க முடியும் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் விநியோகம் வாரம் ஒருமுறை என குறைக்கப்பட்டுள்ள நிலையில், நிலத்தடி நீர் நிலையோ கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக குறைந்துள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. 2016-ம் ஆண்டு பெய்த மழை அளவை விட 2018-ம்ஆண்டு மழை அதிகம் என்று மண்டல வானிலை மையம் கூறுகிறது.

2016ம் ஆண்டு, 324.6 மில்லி மீட்டர் மழை பெய்தது என்றால், 2018ம் ஆண்டு 390.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. ஆனாலும் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. வழக்கத்தை விட மழை அதிகமாக பெய்தாலும், அதை சேகரிக்கும் வசதிகள் குறைந்தது, அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சுவது, மழை நீர் சேகரிப்பில் காட்டும் அலட்சியம், நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய அபாயத்தை உருவாக்கியுள்ளன. குடிநீர் தட்டுப்பாடு சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பெரிய அளவில் பாதிக்கலாம் என்கிறார்கள். தற்போது கோடை விடுமுறை காலம். இன்னும் சில நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட இருக்கின்றன. சென்னையில் உள்ள பள்ளிகள் பெரும்பாலும் மாநகராட்சி வழங்கும் குடிநீரையே நம்பி இருக்கின்றன.

ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டும் போர் வசதி உள்ளது. அந்த போர்களிலும் தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது. ஒரு மாணவரின் ஒரு நாளைய குறைந்தபட்ச தண்ணீர் தேவை என்பது குடிப்பதற்கு 1 லிட்டரும் புழங்குவதற்கு 10 லிட்டரும். 2 ஆயிரம் மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் தேவை. இதை பூர்த்தி செய்ய முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. பள்ளி முதல்வர்களும் தலைமை ஆசிரியர்களும் இதை உணர்ந்து கவலை அடைந்துள்ளனர். இத்தனை நாட்களாக சமாளித்தோம். பள்ளி திறந்த பின்னர் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். தாம்பரத்தை சுற்றியுள்ள சில புறநகர பள்ளிகளுக்கு மட்டும் அருகில் இருக்கும் விவசாய கிராமங்களில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது.

ஆனால் நகர்ப்புற மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக மாணவிகள் பயிலும் பள்ளிகளில் அவர்களுக்கான தண்ணீர் தேவை அதிகம். ஜூன் 3ம் தேதி பள்ளி திறக்கப்படுவது உறுதியான நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பள்ளி திறப்பை தள்ளிப்போட முடியுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி தள்ளி போடப்பட்டாலும் அது தற்காலிக தீர்வாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வாக இருக்காது. தண்ணீர் பற்றாக்குறையுடன் பள்ளிகள் திறக்கப்பட்டால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படும். போதிய தண்ணீர் வசதி இல்லாவிட்டால் காலரா, வயிற்றுப்போக்கு, சிறுநீர் பிரச்சினைகள், வறட்சி காரணமாக ஏற்படும் மயக்கம் வரை ஏற்பட வாய்ப்பு உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: chennai, doctors, Schools, tamilnadu, water
-=-