சென்னை:

மிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால், பல இடங்களில் நோயாளிகள் கடுமையான பாதிப்பு உள்ளானார்கள்.

மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு, ஊதிய உயர்வு, காலம் சார்ந்த பதவி உயர்வு என பல்வேறு  கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி, தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இதுதொடர்பாக ஏற்கனவே பலமுறை மனு கொடுத்தும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், இன்று   இன்று ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர்.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டனர்.

அரசு மருத்துவமனையில் முக்கிய சிகிச்சை பிரிவுகளான  இருதயம், சிறுநீரகம்,  சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்த பிரிவு போன்ற பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லாத நிலையில், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை அரசு மருத்துவமனைகள்

சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளான  ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை போன்ற மிகப்பெரிய அரசு மருத்துவமனைளுக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வரும் நிலையில், இன்று மருத்துவர்கள் போராட்டம் காரணமாக ஏராளமான புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

அதுபோல, , ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி, மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரி பாய் அரசு மகப்பேறு ஆஸ்பத்திரி மற்றும் மாநகராட்சியின் மூலம் செயல்படும் மருத்துவமனைகளில் டாக்டர்கள் வேலைக்கு செல்ல வில்லை.  குறைந்த அளவிலான மருத்துவர்கள் மட்டுமே உள்நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை வழங்கி வருகின்றனர். பல இடங்களில் நோயாளிகள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருச்சி மாவட்ட அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க வில்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 கரூர் –  பெரம்பலூர்:

கரூர் மாவட்டத்தில் கரூர் அரசு தலைமை மருத்துவமனை, குளித்தலை,  அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, மண்மங்கலம், கிருஷ்ணராயபுரம், மைலம் பட்டி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகளிலும் பெரும்பாலான மருத்துவர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பூர், காரை, கிருஷ்ணா புரத்தில் அரசு ஆஸ்பத்திரி உள்ளது. மாவட்டம் முழுவதும் 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 130 டாக்டர்கள் வரை பணியாற்றி வரும் நிலையில், சுமார் 30 டாக்டர்கள் மட்டுமே பணிக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஏராளமான புறநோயாளிகள்  மருத்துவர்கள் இல்லாததால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர்.

அரியலூர்- புதுக்கோட்டை மாவட்டத்தில்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள்  வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அங்கு வழங்கமான சிகிச்சைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலூர்

கடலூர், விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமண்ணார் கோவில், வேப்பூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் டாக்டர்கள் ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் மருத்துவ சேவைகள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நோயாளிகள் அவதி அடைந்து வந்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, குடியாத்தம், அரக்கோணம், வாலாஜா, ஆற்காடு, ராணிப்பேட்டை உள்பட 13 அரசு ஆஸ்பத்திரிகள் 90-க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் 6 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் பணிபுரியும் 450 டாக்டர்கள் இன்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரசவம் உள்பட முக்கிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புற நோயாளிகள் பிரிவு உள்நோயாளிகள் பிரிவு டாக்டர்கள் யாரும் பணிக்கு வராததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

திருவண்ணாமலை – வந்தவாசி 

திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, வந்தவாசி, செய்யாறு, செங்கம், போளூர், ஆரணி, தண்டராம் பட்டு உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய அரசு மருத்துவர்களின் போராட்டம் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.