திருச்சி:

வாகன சோதனையில் காவலர் எட்டி உதைத்ததால் மரணமடைந்த உஷா கர்ப்பிணி இல்லை என்று மருத்தவர்கள் கூறுவது பொய் என்று அவரது கணவர் ராஜா தெரிவித்திருக்கிறார்.

திருச்சியில் கடந்த 7ம் தேதி தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வானகத்தில் சென்ற ராஜா என்பவரை, போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் விரட்டி சென்று எட்டி உதைத்ததில் ராஜாவின் மனைவி உஷா சம்பவ இடத்திலேயே பலியானார்.

உஷா அப்போது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்தார் என ராஜா கதறினார். பெண் பலியானது என்பதோடு, கர்ப்பிணி என்ற தகவல் மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

 

சம்பந்தப்பட்ட காவலர் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடந்தது. காமராஜ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், உஷாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த சரவணன் என்கிற மருத்துவர், உடற்கூறு சோதனையில், உஷா கர்ப்பிணி இல்லை என்றும் அவரது வயிற்றில் சிறு கட்டி இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  இதை திருச்சியை மாவட்ட எஸ்.பி கல்யாணம் தெரிவித்தார்.

இந்தத் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து  உஷாவின் கணவர் ராஜா, “ துவக்கத்தில் இருந்தே இந்த விவகாரத்தில் காவல்துறை தவறான தகவலையே சொல்லி வருகிறது. தற்போது போஸ்மார்டத்திலும் ஏதோ குளறுபடி செய்திருக்கிறார்கள். , என் மனைவி என்னிடம் கர்ப்பம் என்று சொன்னதை தான் சொல்லி அழுதேன். இதை  காவல்துறையினர் மாற்ற முயற்சிக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரம் மூன்றுமாத கர்ப்பிணி என்றால் ராஜா – உஷா தம்பதி  மருத்துவரிடம் ஆலோசனை பெற்று உறுதிப்படுத்தியிருப்பார்கள்.  அந்த மருத்துவ ரிப்போர்ட்டை ராஜா வெளியிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.