மருந்துகளின் மூலக்கூறு பெயரை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்!! டாக்டர்களுக்கு எச்சரிக்கை

--

டெல்லி:

மருந்துகளின் மூலக்கூறு பெயர்களை குறிப்பிடாமல் பிராண்ட் பெயர்களை குறிப்பிட்டு எழுதும் டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

உதாரணமாக காய்ச்சல் நோய்க்கு டாக்டரை பார்க்க சென்றால் அவர் பேரசிட்டமால் என்று ஜெனரிக் பெயரை குறிப்பிட்டு சீட்டு கொடுக்க வேண்டும். மாறாக க்ரோசின்,டோலோ என்று எழுதி கொடுத்தால் இனி அவர் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ கவுன்சில் முடிவு செய்துள்ளது.

நோயாளிகளுக்கு குறைந்த விலையிலான “ஜெனரிக்’ மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வகையில் விரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மருந்துகள் பரிந்துரை தொடர்பாக, அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்கள், மருத்துவமனைகளின் இயக்குநர்கள், அனைத்து மாநில மருத்துவக் கவுன்சில்களின் தலைவர்கள் ஆகியோருக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் 2016ம் ஆண்டின் அறிவிக்கையின்படி, நோயாளிகளுக்கு மரு ந்துகளைப் பரிந்துரை செய்யும்போது, அவற்றின் “பிராண்ட்’ பெயர்களுக்குப் பதிலாக, அடிப்படை மூலக்கூறு மருந்தின் பெயரையே மருத்துவர்கள் கட்டாயம் பரிந்துரை செய்ய வேண்டும்.

இந்த அறிவிக்கையை, இந்திய மருத்துவக் கவுன்சில் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு பரிந்துரை செய்யாத மருத்துவர்கள், கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.