ஜெ. மகள் என அறிவிக்க கோரிய வழக்கு: அம்ருதாவின் ஆவணங்கள் போலியானவை…! தமிழகஅரசு தகவல்

சென்னை:

ஜெயலலிதாவை தனது தாய் என்று கூறியுள்ள அம்ருதா கொடுத்துள்ள ஆவணங்கள் போலியானது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்ற அமர்ருதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த  மனுவில்,  “கடந்த 14.8.1980 அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன். தற்போது தான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி சம்பிரதாய சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே உச்சநீதி மன்றம் இந்த வழக்கை நிராகரித்த நிலையில்,  சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை யில்,  ஜெயலலிதாவின் ரத்த மாதிரி  இருக்கிறதா? என்றும்,  ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை அப்பா என்று உரிமை கோராதது ஏன் என்றும், அதை கூற எது தடுக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

இதற்கிடையில், ஜெய அண்ணன் மகனான தீபக் மற்றும் தீபா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  “என் அத்தை ஜெயலலிதா வின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அம்ருதா வழக்கு இன்று   மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அம்ருதா கூறுவது பொய் என்றும், அவர் தாக்கல் செய்துள்ள ஆவணங்கள் போலியானவை, மோசடியானது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.