டில்லி,

டுத்த ஆண்டு முதல் இஸ்லாமியர்களின் ஹஜ் புனித பயணத்துக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அரசுக்கு ரூ.650 கோடி ரூபாய் ஆண்டுக்கு மிச்சமாகும் என கூறப்படுகிறது.

 

ஹஜ் (Hajj) பயணம்  என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் யாத்திரைக்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புனித பயணமாக மெக்கா செல்கிறார்கள். இவர்களுக்கு மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட தொகை மானியமாக அளித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை ரத்து செய்ய இருப்பதாக  மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு சார்பாக தாக்கல் செய்த மனுவில்,  ஹஜ் யாத்திரைக்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.  அதனை அடுத்து கடந்த ஆண்டு இத்தொகையினை ரூ.450 கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளதாக கூறி உள்ளது.

இந்நிலையில், மத்திய அரசின் ஹஜ் கொள்கையினை மறுபரிசீலனை செய்வதற்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை, வெளியுறவுத்துறை, விமானப் போக்குவரத்துத் துறை, ஏர் இந்தியா, இந்திய ஹஜ் கமிட்டி ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவின் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் பின்னர் செய்தியாளரிடம் கூறுகையில், ஹஜ் மானியம் அடுத்த ஆண்டு முதல் நிறுத்தப்படும் என்று கூறி உள்ளனர்.

அதன்படி, வரும்  2018 முதல் ஹஜ் மானியத்தை மத்திய அரசு  நிறுத்த முடிவு  செய்துள்ளது. இதன் காரணமாக அரசுக்கு  ஆண்டுதோறும் ரூ.650 கோடி மிச்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் மானியத்திற்கு பதிலாக சிறுபான்மையினரின் கல்வி மற்றும் நலவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.