டெல்லி :

மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்து பிரதமர் மோடி நேற்று காலை 10 மணிக்கு அறிவித்த போது, ஏப்ரல் 20-க்கு பிறகு சில தளர்வுகள் இருக்கும் இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறியிருந்தார்.

இன்று காலை வெளியான தளர்வுகளில், விவசாயம் சார்ந்த தொழில்களான, பால், மீன் வளர்ப்பு, தேயிலை, காபி மற்றும் ரப்பர் தோட்டம் மற்றும் விவசாயத்திற்கு தேவையான உரம் மற்றும் உபகரணங்கள் விற்கும் கடைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளித்துள்ளது.

மேலும் கட்டுமான பணிகள், ஐ.டி. துறையில் 50% பணியாளர்களை கொண்டு இயக்குவதும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த துறை சார்ந்த நிறுவனங்கள் சமூக விலகல், பணியிட சுகாதாரம் ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, கடைபிடிக்க தவறினால் இந்த தளர்வுகள் நீக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்த அறிவிப்பின் முக்கிய அம்சமாக இது அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே என்று கூறியிருக்கிறது.

இதனால், இந்திய அளவில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் இந்தியாவின் பொருளாதார மையங்களான மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் தமிழகத்தில் இந்த தளர்வுகள் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி தற்போது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி இருக்கிறது.