சிறுவனை  நாய்  கடித்துக் குதறிய பயங்கரம்…  கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்..

வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் மோகம் எல்லை மீறிச்செல்லும் போது அதன் விளைவுகளும் மிக மோசமானவையாக இருக்கின்றன.  ஆர்வக்கோளாறினால் சரியான அறிதல் இன்றி ஏதாவது ஒன்றினை வாங்கி வந்து வீட்டில் வளர்க்க  முயல்வது ஆபத்தானதாகும்.

அது போன்ற ஒரு சம்பவம்jதான் சென்னை ஆவடியில் நடந்துள்ளது.  குமார் என்பவர் தனது வீட்டில் ரோட்வெய்லர் ரக நாய் ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.  நேற்று காம்பவுண்டு கதவைச் சரியாக மூடாமல் வைத்துவிட, இவரின் நாய் வெறியுடன் வெளியே ஓடிவந்து, அந்த வழியாகக் கடைக்குச் சென்றுகொண்டிருந்த 9 வயது சிறுவன் விஷ்ணுவைத் தலை, கழுத்து என்று கடித்துக் குதறி விட்டது.  சிறுவனின் கதறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தெரிவித்து, தற்போது சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான்.

“ரோட்வெய்லர் ரக பெரிய தாடையும், கூர்மையான பற்களையும் கொண்டது.  மிகவும் ஆக்ரோஷமானதும், முரட்டுத்தனமானதும் கூட.  பெரும்பாலும் இந்த வகை நாய்கள் போலீஸ் மற்றும் செக்யூரிட்டி போர்ஸ் போன்றவற்றில் குற்றவாளிகளைப் பிடிக்கவென வளர்க்கப்படும் இனத்தைச் சேர்ந்தது இது.  நாய் வளர்ப்பவர் சொல்வதைக் கேட்கும்படி முறையாகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.   இல்லாவிட்டால் இது போன்ற சம்பவங்கள் நேரிடும்” என்கின்றனர் இது பற்றி அறிந்தவர்கள்.

“டாக்டர் உயிருக்கு ஆபத்தில்லைனு சொல்லிட்டார்.  ஆனாலும் உச்சந்தலையில் பாதியை கடிச்சு எடுத்திடுச்சு இந்த நாய்.  இப்போ இதன் ஓனரை அரெஸ்ட் பண்ணி வழக்கு பதிவு செஞ்சிருக்கோம்.  நாயை புளூ கிராஸ் மூலமாக கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்துள்ளோம்.  நாயின் நிலையை பரிசோதித்து அறிந்த பின்பு தான் அச்சிறுவனின் உண்மை நிலை  குறித்துத் தெரியவரும்” என்கிறார் ஆவடி டேங்க் தொழிற்சாலை காவல்நிலைய அதிகாரி.

சிறுவனின் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருந்தால்  நிலைமை மிகவும் மோசமானதாக ஆகியிருக்கும்.  வளர்ப்பு பிராணிகள் விசயத்தில் சரியான வழிமுறைகள் வகுக்கப்படுவது கட்டாயமான ஒன்றாகி வருகிறது.

– லெட்சுமி பிரியா