நாய்களை வளர்க்க கடும் கட்டுப்பாடு : கேரள அரசு முடிவு

--

திருவனந்தபுரம்

கேரளாவில் இரு வளர்ப்பு நாய்கள் கடித்து ஒரு பெண் மரணம் அடைந்ததை தொடர்ந்து நாய்களை வளர்க்க புதிய சட்டங்கள் இயற்ற உள்ளதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார்.

பலரால் செல்லப் பிராணிகளாக விரும்பி வளர்க்கப்பட்டு வரும் விலங்குகளில் நாய்கள் முதலிடம் வகிக்கின்றன.    பண்டைய காலத்தில் காவலுக்கு நாயை மிகவும் நம்பி இருந்தனர்.    அதனால் சீற்றமுள்ள நாய்களை காவலுக்காக வளர்க்கத் துவங்கினர்.   அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.    அதே நேரத்தில் இந்த நாய்கள் பலரைக் கடித்து விடுவதாகவும் கூறப்படுகிறது.

வயநாடு மாவட்டத்தில் வசித்து வரும் ராஜம்மா என்னும் 60 வயதுப் பெண் வைத்ரி என்னும் இடத்தில் உள்ள காபி எஸ்டேட்டில் பணி புரிந்து வருகிறார்.    அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் அவருக்கு இந்தப் பணி வழங்கபட்டுள்ளது.   அவர் வேறு சில பெண்களுடன் சென்ற திங்கள் அன்று காபிக்கொட்டை பறித்துக் கொண்டிருந்தார்.     மற்ற பெண்களிடம் இருந்து சற்றே விலகி அவர் தனியாக காபிக் கொட்டை பறித்துக் கொண்டிருந்த போது அவரை இரு ராட்வீலர் வகை நாய்கள் தாக்கி கடித்துள்ளன.

அதனால்  ராஜம்மா மரணம் அடைந்துள்ளார்.   இந்த சம்பவம் அங்கு பணி புரிந்த மற்றவர்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது.    அந்த நாய்களை வளர்த்து வந்த காரிகல் ஜோஸ் என்பவர்  நாய்கள் கடித்த செய்தி வந்த உடனேயே காவல்துறையினரிடம் சரண் அடைந்து பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.   தற்போது அவர் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிகழ்வு மாநிலம் எங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கியதால்  அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்து ராஜம்மாவின் குடும்பத்தினருக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 5000 வழங்கி உள்ளது.   அத்துடன் அவருடைய மரணத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசு உத்தேசித்துள்ளது.

மேற்கூறிய தகவலை தெரிவித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், “தற்போதுள்ள சட்டத்தின் படி செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் யாரையாவது கடித்தால் உரிமையாளருக்கு அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.   இந்த சட்டத்தை கடுமையாக்க அரசு உத்தேசித்துள்ளது.    மேலும் நாய்கள் வளர்ப்பதற்கான விதிகளை கடுமையாக்க அரசு திட்டமிட்டுள்ளது.   அதுவும் சிறிது சீற்றமான நாய்களை வளர்ப்பதற்கு விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்”  எனத் தெரிவித்துள்ளார்.