நாய் கறி அல்ல ஆட்டுக்கறிதான்: சென்னை கால் நடை மருத்துவமனை ஆய்வு நிரூபணம்

--

சென்னை:

சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நாய்க்கறி விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், நாய் கறி என்று கூறப்பட்டு அழிக்கப்பட்ட கறிகள், ஆட்டுக்கறிதான் என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் கறி கெட்டுப்போய் இருந்தது என்றும் தெரிவித்து உள்ளது.

சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், நாய்க்கறி என்று கூறப்பட்ட வைகள் அனைத்தும் ஆட்டுக்கறி என்று நிரூபணமாகி உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரிலிருந்து, மன்னார்குடிக்கு ஆட்டிறைச்சி என்ற பெயரில் 2 ஆயிரம் கிலோ இறைச்சி ரயில் மூலம் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தது

அதை சோதனையிட்ட ரயில்வே போலீசார் மற்றும்  உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், ஆட்டு இறைச்சியுடன் நாய்கறியும் கலந்திருப்பதாக கூறி, அந்த கறிகளை கொடுங்கையூர் குப்பை மேட்டுக்கு எடுத்துச்சென்று அழித்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், கறியை இறக்குமதி செய்தவர்கள் அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட 2 பேரை ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், இது குறித்து  விசாரிக்க தனிப்படை ரயில்வே போலீஸார் விரைவில் ஜோத்பூர் செல்ல இருப்பதாகவும்  கூறப்பட்டது.

இந்த நிலையில், நாய்கறி என்ற கூறப்பட்ட கறிகளின் மாதிரிகளை பரிசோதித்த சென்னை கால்நடை மருத்துவமனை, அது நாய்க்கறி அல்ல…. ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்துள்ளது. மேலும் இறக்குமதி செய்த இறைச்சிகள் அனைத்தும் கெட்டுப்போய் இருந்ததாகவும் தெரிவித்து உள்ளது.

இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.