இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் ஒரு குழந்தையை கடித்த நாய்க்கு மரண தண்டனையை உதவி கமிஷனர் ராஜா சலீம் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சலீம் கூறுகையில், ‘‘ இந்த தண்டனை மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. குழந்தை கடித்து காயப்படுத்திய அந்த நாய் கொல்லப்பட வேண்டும்’’ என்றார்.

அந்த நாய் பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை ஊர்ஜிதம் செய்யுமாறு உயர் அதிகாரி ஒருவர் கூறிய ஆலோசனையையும் அவர் ஏற்கவில்லை. அதோடு, ‘‘அந்த நாய் உரிமையாளருக்கு எதிரான வழக்கு விசாரணையில் உள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விசித்திர தண்டனையை எதிர்த்து நாய் உரிமையாளர் ஜாமில் கூடுதல் துணை கமிஷனரிடம் மேல் முறையீடு செய்துள்ளார். அந்த மனுவில், ‘‘பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினர் எனது நாய்க்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். அதற்கான ஒரு வார தண்டனையை அந்த நாய் அனுபவித்துவிட்டது. அதற்கு மேல் அந்த நாய்க்கு தண்டனை வழங்குவது அநியாயம்’’ என தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘எனது நாய்க்கு நியாயம் கிடைப்பதற்காக அனைத்து நீதிமன்ற வாயில்களின் கதவையும் தட்டுவேன்’’ என ஜமீல் தெரிவித்துள்ளார்.