கொச்சி: டாலர் கடத்தல் வழக்கில் கேரள சட்டசபை சபாநாயகர் நேரில் ஆஜராகுமாறு சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

தொடர் விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இந்த கடத்தலில் இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது. தப்பியோடி தலைமறைவான அவரை பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர். இதுவரை 20 பேர் வரை இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்ட அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.இந் நிலையில், கொச்சியில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில் வரும்  12ம் தேதி ஆஜராகும்படி கேரள சட்டசபை சபாநாயகர் பி. ஸ்ரீராம கிருஷ்ணனுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இதுபற்றி கேரள உயர் நீதிமன்றத்தில் சுங்க துறை ஆணையாளர் சுமித் குமார் பிரமாண பத்திரம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் சபாநாயகர் பி. ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோருக்கு டாலர் கடத்தலில் தொடர்பு உள்ளது என தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுவப்னா சுரேஷ் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர 3 கேரள அமைச்சர்கள் மற்றும் சபாநாயகரின் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றி சுவப்னா சுரேஷ் தெளிவுடன் கூறியுள்ளார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.