இலங்கையில் உள்நாட்டு குழப்பம்: ராஜபக்சே அமைச்சரவை பதவி ஏற்பு?

கொழும்பு:

லங்கையில் அதிபருக்கும், பிரதமருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக பிரதமர் ரணில் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜபக்சே நியமிக்கப்பட்டார்.

இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமெரிக்கா உள்பட சில நாடுகள் இலங்கைக்கு கண்டனங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், புதிய பிரதமரா  ராஜபக்சே தலைமையிலான அமைச்சரவை இன்று பதவி ஏற்றுள்ளதாகவும், அதைத்தொடர்ந்து ராஜபக்சே தனது பணிகளை தொடங்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு குழப்பம் காரணமாக, ரணிலை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி, தனது எதிரியான, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேயை அழைத்து புதிய பிரதமராக சிறிசேனா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ரணில், தானே தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பதாக கூறி, பிரதமர் இல்லமான அலரி மாளிகையில் இருந்தும் வெளியேற மறுத்து விட்டார். அவருக்கு ஆதரவாக  சபாநாயகர் கரு ஜெயசூர்யாவும் களமிறங்கினார்.

இதனால் இலங்கை அரசியலில் உச்சக்கட்ட குழப்பமும், பதட்டமும் நிலவுகிறது. இதையடுத்து பாராளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேனா நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதிபர் சிறிசேனாவில் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜபக்சே ஆதரவாளர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக  தமிழர்கள் வாழும் பகுதிகளில் பீதி நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென யாருக்கும் தெரியாமல் பிரதமர் பதவியை ஏற்ற ராஜபக்சே இன்று (திங்கட்கிழமை) அதிகாரப் பூர்வமாக பிரதமர் பொறுப்பை ஏற்றார். கொழும்பு அரசவை மண்டபத்தில் அவர் பொறுப்பு ஏற்கும் விழா 11 மணிக்கு தொடங்கி நடந்தது. அத்துடன் ராஜபக்சே தலைமையில் அமைக்கப்படும் அமைச்சரவையில் 30 பேர் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரும் ராஜபக்சேயின் தீவிர ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.

இலங்கையின் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பை ராஜபக்சே ஏற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இன்று முதல் ராஜபக்சே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைவசம் போய் சேர்ந்துள்ளது.

மொத்தம் 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பாராளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபித்துக் காட்ட 113 எம்.பி.க்கள் ஆதரவு வேண்டும். ராஜபக்சேக்கு 18 எம்.பி.க்களும், ரனில் விக்ரமசிங்கேவுக்கு 7 எம்.பி.க்களும் குறைவாக உள்ளனர்.

இந்த நிலையில் 16 எம்.பி.க்களைக் கொண்ட தமிழ் தேசிய கூட்டணியும், 6 எம்.பி.க்களைக் கொண்ட மார்க்சிஸ்ட் ஜே.வி.பி. கட்சியும் என்ன முடிவு எடுக்கும் என்று தெரியவில்லை. இதனால் இலங்கையில் குதிரை பேரம் தொடங்கியுள்ளது. சுமார் 20 எம்.பி.க்களுக்கு ராஜபக்சே விலை பேசி  வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.