மேற்கு வங்கம் : வீட்டுப் பணியாளர் சங்கத்துக்கு தொழிற்சங்க அந்தஸ்து

கொல்கத்தா

வீட்டுப் பணியாளர் சங்கத்துக்கு மேற்கு வங்க அரசு தொழிற்சங்க அந்தஸ்து அளித்துள்ளது.

கொல்கத்தா நகரில் வீட்டுப் பணி புரிவோர் இணைந்து மேற்கு வங்க வீட்டுப் பணியாளர் சங்கம் என ஒன்றை அமைத்தனர்.   அது மாநிலம் எங்கும் வளர்ந்தது.    அந்த சங்கத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை அவர்கள் பல முறை முன் வைத்தனர்.   ஆனால் இதற்கு தொழிற்சங்க அந்தஸ்து இல்லாததால் உறுப்பினர்களால் உரிமைகளைப் பெற முடியவில்லை.

இது குறித்து இந்த சங்கத்தின் நீண்ட கால உறுப்பினரான டாப்சி மொய்ரா, “கடந்த 2014 ஆம் வருடம் நாங்கள் தொழிற்சங்க அந்தஸ்து கோரி விண்ணப்பித்தோம்.    ஆனால் அரசு எங்கள் விண்ணப்பத்தை கவனிக்கவில்லை.    நான் காலை ஆறு மணிக்கு பணிக்குச் சென்று மாலையில் தான் இல்லத்துக்கு திரும்புவேன்.  அத்துடன் வாரத்தில் ஒரு சில நாட்களாவது அலுவலகம் சென்று எங்கள் விண்ணப்பம் குறித்து விசாரித்து வருவேன்.

எங்கள் சங்கத்துக்கு தொழிற்சங்க அந்தஸ்து பெற நான் மட்டும் இன்றி எங்கள் சங்கத்தை சேர்ந்த அனைவரும் மிகவும் பாடுபட்டனர்.   ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாள் என முறை வைத்துக் கொண்டு எங்கள் விண்ணப்பம் குறித்து அலுவலகத்தில் வழக்கமாக விசாரித்து வருவோம்.  நான்கு ஆண்டுகள் கழித்து எங்களுக்கு இந்த அந்தஸ்தை அரசு அளித்துள்ளது” என தெரிவித்துளார்.

இது குறித்து திருணாமூல் தொழிற் சங்க தலைவரும் அமைச்சருமான சோவன் தேப் சட்டோபாத்யாய், “மாநிலத்திலேயே முதல் முறையாக அரசு வீட்டுப் பணியாளர்கள் சங்கத்துக்கு தொழிற்சங்க அந்தஸ்து அளித்துள்ளது” எனக் கூறி உள்ளார்.