குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் மீது அடுத்ததடுத்து தொடுக்கப்பட்டிருக்கும் செக்ஸ் புகார்களால் அமெரிக்க அதிபர் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது.

trump9

74 வயதான ஜெசிகா லீட்ஸ் என்ற பெண்மனி தனக்கு 38 வயது இருக்கையில் விமானப் பயணம் செய்தபோது பக்கத்து சீட்டில் இருந்த ட்ரம்ப் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அவரது ஆக்டோபஸ் கரங்களிடம் தான் அன்று மாட்டிக்கொண்டதாகவும் ஒரு குற்றச்சாட்டை கூறி பரபரப்பை ஏற்ப்படுத்தி இருக்கிறார். ரேச்சல் குரூக்ஸ் என்ற மற்றொரு பெண்மணி தனக்கு 22 வயதாக இருக்கும் போது ட்ரம்ப், லிப்ட்டுக்கு வெளியே வைத்து தனது அனுமதியின்றி வலுக்கட்டாயமாக தனது உதட்டில் முத்தம் கொடுத்ததாக ஒரு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் ட்ரம்புக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை ட்ரம்பின் புகழை கெடுக்கும் விதத்தில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டதாக கூறி ட்ரம்ப்பின் வழக்கறிஞர் அந்த ஏட்டின் மீது வழக்கு தொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
இக்குற்றச்சாட்டுக்களை டொனால்டு ட்ரம்ப் மறுத்திருக்கிறார். இது ஆதாரமற்ற கற்பனையான பொய்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார். ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்தாலும் அவர் அவ்வப்போது பெண்களைக் குறித்து பேசிவரும் சர்ச்சைக்குரிய பேச்சுகள் அவருக்கு வினையாக அமைந்திருக்கின்றன. பெண்களிடம் தாம் மோசமாக நடந்து கொண்டது பற்றி அவர் கூறிய “பிரபலமாக இருக்கிறபோது ஒருவர் எதையும் செய்யலாம்” என்ற கருத்து ஆதாரபூர்வமாக வீடியோவாக வெளியாகி அனைவரையும் அதிர வைத்தது. அதற்காக அவர் மன்னிப்பு கேட்டபோதும் அவரது சொந்தக் கட்சியிலேயே பலரும் அவர் மீது எரிச்சலடைந்தனர்.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்தும், ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பேச்சு பற்றியும் கருத்து தெரிவித்த அமெரிக்காவின் முதல் குடிமகளும் அதிபர் ஒபாமாவின் மனைவியுமான மிசேல் ஒபாமா, இது அதிர்ச்சிகரமான அவமானகரமான விஷயம் என்று கொந்தளித்துள்ளார், தனது ஆபாச பேச்சுக்கள் மூலம் ட்ரம்ப் அமெரிக்க பெண்களையும் பெற்றோர்களையும் அவமானப்படுத்தியுள்ளார் என்றும், இதுபற்றி பேசுவது கற்பனை செய்வதும்கூட வேதனையாக இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் இந்த குற்றச்சாட்டுக்கள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்று கூறி தொடர்ந்து மறுத்துவருகிறார். ஆனாலும் இதுபோன்று அடுத்தடுத்து தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகள் ட்ரம்ப்பின் செல்வாக்கு கடுமையாக சரிந்திருப்பதை கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.