முஸ்லிம் நாடுகளுக்கு தடை நீக்கம்…..நீதித்துறை மீது டிரம்ப் பாய்ச்சல்

--

வாஷிங்டன்:

ஈரான் உள்பட 7 முஸ்லிம் நாடுகளின் பயணிகளுக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப உத்தரவிட்டார். இதற்கு உலகளவில் டிரம்புக்கு கண்டனங்கள் குவிந்தன.

இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் ஒன்று தடை விதித்தது. இதை தொடர்ந்து தற்போது அமெரிக்க விமானநிலையங்களில் அனைத்து நாட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டிரம்ப் கூறுகையில்,‘‘நாட்டின் நீதிதுறையின் மீது சந்தேகம் ஏற்படுகிறது. நாட்டை ஆபத்தில் சிக்க வைக்கும் செயலில் ஒரு நீதிபதி ஈடுபடுவதை என்னால் நம்ப முடியவில்லை. எதேனும் நடந்தால் நீதிபதியும், நீதித்துறையின் செயல்பாடுமே காரணம்.

நாட்டிற்குள் நுழைபவர்களை தீவிர கவனத்துடன் சோதனை செய்ய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். ஒரு பணியை செய்வதை நீதிமன்றங்கள் கடுமையாக்குகின்றன’’ என அவர் தெரிவித்துள்ளார்.

‘‘ இந்த தடை நீக்கப்பட்டதன் மூலம் தீயவர்கள், அபாயகரமானவர்கள் நாட்டிற்குள் நுழையும் நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றும் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சீயேட்டில் மாவட்ட நீதிபதியான ஜேமஸ் ராபர்ட் என்பவர் தான் இந்த உத்தரவுக்கு தடை விதித்தார். இவர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ் காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டவர். இவரது உத்தரவு டிரம்பின் முதல் நடவடிக்கைக்கு ஏற்பட்ட பின்னடைவாகும்.

மேலும், இது தொடர்பான அரசின் மேல் முறையீட்டு மனுவையும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் 9வது சர்க்யூட் நிராகரித்து, நீதபதி ஜேமஸ் ராபர்ட்டின் உத்தரவு தொடரும் என அறிவித்தது.