வாஷிங்டன்

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு அமெரிக்க அரசு அறிவித்துள்ள நிவாரண நிதி காசோலையில் அதிபர் டிரம்ப் பெயர் இடம் பெற உள்ளது.

கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதனால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  சுமார் 1.6 கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர்.  வேலை இழந்தோருக்கும் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கும் அமெரிக்க அரசு நிதி உதவி வழங்க உள்ளது.

இவர்களுக்கு  அளிக்கப்பட உள்ள இரண்டு லட்சம் கோடி டாலர் தொகை காசோலையாக அளிக்கப்பட உள்ளது.  இந்த காசோலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் பெயர் பொறிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  அமெரிக்காவில் அரசு நிவாரணத்தில் அதிபர் பெயர் பொறிக்கப்படுவது முதல் முறையாகும்.

இது அமெரிக்க அரசின் கருவூல அதிகாரிகளுக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.  இந்த உத்தரவின் பைட் ஒவ்வொரு காசோலையிலும் அதிபர் பெயர் இடம் பெற வேண்டுமானால் அந்த காசோலை அச்சடிக்க நேரமாகும் எனவும் இதனால் நிவாரண நிதி மக்களுக்குத் தாமதமாகக் கிடைக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநில அரசு அளிக்கும் நிவாரணப் பொருட்களில் அப்போதைய முதல்வர்கள் பெயர் இடம் பெறுவது இந்தியாவில் உள்ள பல மாநில மக்களுக்கு வழக்கமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கதாகும்.