இந்தியாவின் அழைப்பை நிராகரித்த அதிபர் டிரம்ப் ?

2019-ம் ஆண்டு நடைபெறும் நாட்டின் 69-வது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு, இந்தியா விடுத்த அழைப்பை அவர் மறுத்துவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை மாளிகையின் ஊடகத்துறை செயலாளர் சாரா சாண்டர்ஸ் அளித்த பேட்டியில், ” 2019-ம் ஆண்டு இந்தியாவின் குடியரசு தினவிழாவில் அதிபர் டொனால்ட் ட்ரம்பை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த அழைப்பு குறித்து இறுதி முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே உள்ளிட்ட சில செய்தி சேனல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

trump

ஆதலால், அதிபர் ட்ரம்ப் இந்தியாவில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க மாட்டார் என்றே உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் எந்தவிதமான தகவலும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இதற்கிடையே டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம், ” அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்குக் குடியரசு தினத்தன்று வருவது குறித்து வெள்ளை மாளிகைதான் கருத்து தெரிவிக்க முடியும் நாங்கள் கூற இயலாது ” எனத் தெரிவித்துவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்க அதிகாரிகள் அதிபர் டிரம்பின் இந்தியப் பயணம் குறித்துப் பேசுகையில், ஜனவரி மாதத்தில் அமெரிக்காவின் எஸ்ஓடியு மாநாடு நடைபெற இருப்பதால் அதில் அதிபர் டிரம்ப் பங்கேற்று பேசஉள்ளார். ஆதலால், இந்தியாவுக்கு அதிபர் ட்ரம்ப் பயணிப்பது சந்தேகம் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் பங்கேற்காததன் மூலம் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவு சமூகமாக இல்லை என்பது தெரிய வருகிறது. காரணம், அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரித்தும இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெயை கொள்முதல் செய்து வருகிறது. இந்தியாவின் செயல் அதிபர் ட்ரம்புக்கு தொடர்ந்த எரிச்சலூட்டி வருகிறது. தொடர்ந்து ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்தால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.

மேலும், ரஷியாவிடம் இருந்து எஸ்-400ரக அதிநவீன ஏவுகணையை இந்தியா வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் அதிபர் விளாதிமிர் புதினுடன், பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தாலும் இந்தியா மீது அமெரிக்க பொருளாதாரத் தடைவிதிக்க ஆயத்தமாகி வருகிறது. இந்த கசப்பான சூழலில் குடியரசு தின விழாவுக்கு இந்தியாவின் அழைப்பை அதிபர் ட்ரம்ப் மறுத்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்தத் தகவல் குறித்து வெள்ளை மாளிகை எந்தவித உறுதியும் அளிக்கவில்லை.

இதற்கு முன் நடந்த குடியரசு தின விழாவிற்கு முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, நிகோலஸ் சர்கோஸி, ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும்,மறைந்த நெல்சன் மண்டேலா, ஜான் மேஜர், முகமது கடாமி உள்ளிட்டோர் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.