வடகொரிய அதிபருடன் சந்திப்பு 12ந்தேதி நடைபெறும்: டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்:

மெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்பு திட்ட மிட்டப்படி வரும் 12ந்தேதி நடைபெறும் என டிரம்ப் தெரிவித்து உள்ளார்.

இடையில் பேச்சு வார்த்தை ரத்து என அமெரிக்க அதிபர் அறிவித்த நிலையில்,  இரு நாட்டு அதிகாரிகள் சந்தித்து பேசிய நிலையில், வடகொரிய அதிபர் கிம் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எழுதிய தனிப்பட்ட கடிதம் ஒன்றை வட கொரிய தூதர் கிம் யோங் சோல் டிரம்பிடம் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து, ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 12ந்தேதி வடகொரிய அதிபருடனான சந்திப்பு நடைபெறும் என டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 27ந்தேதி  வடகொரிய அதிபர் தென்கொரிய அதிபர் இருவரும் சந்தித்து பேசினர். இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக வர்ணிக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சு நடத்த தயார் என்று வடகொரிய அதிபர் கிம்  அறிவித்தார்.

தனது அணுஆயுத சோதனை நிலையங்களை அழித்து வடகொரிய அதிபர் தனது இணக்க மான நிலையை உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், வடகொரியஅதிபர் சந்திப்பு உறுதியானது.

இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் இந்த  மாதம் (ஜூன்) 12ந்தேதி  சிங்கப்பூரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், அமெரிக்கா ஒருதலைபட்சமாக  நடந்தால், இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை  மறுபரிசீலனை செய்யப்படலாம் என வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் கிம் கீ-க்வான் கூறினார்.

இதைத்தொடர்ந்து, வட கொரிய அதிபருடனான சந்திப்பை டிரம்ப்  ரத்து செய்தார். இது உலக நாடுகளிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அமெரிக்க மற்றும் தென்கொரிய நாடுகளின் தூதரக அதிகாரிகள்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.

அதையடுத்து,  அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியஅதிபர். கிம் ஜாங் உன்னை  திட்டமிட்ட தேதியில்  எங்களது சந்திப்பு நடைபெற வாய்ப்புள்ளது” என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு வரும் 12ந்தேதி நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பேசிய டிரம்ப்,  வட கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான உறவு ஜூன் 12 ம் தேதி தொடங்கும் என்று நம்புவதாகக் கூறினார். “இது ஒரு வெற்றிகரமான, இறுதியில் ஒரு வெற்றிகரமான செயல் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறி உள்ளார்.

அமெரிக்கா வட கொரியா மீது விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை அகற்றும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்ப்பதாகவும்,  வடகொரியா மீது “அதிகபட்ச அழுத்தத்தை நான் இனிமேல் பயன்படுத்த விரும்பவில்லை,” என்று டிரம்ப் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Donald Trump says Kim Jong Un summit will go ahead on June 12, டிரம்ப் கிம்ஜோங் உன் சந்திப்பு 12ந்தேதி நடைபெறும்: அமெரிக்க அதிபர் அறிவிப்பு
-=-