கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். பேஸ்புக் மற்றும் கூகுள் தவறான தகவல்களை பரப்புவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

trump

புதன்கிழமையன்று ஓவல் அலுவலகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “ கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும், கூகுள் ஏராளமான மக்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது. இத்தகைய நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதில் கவனமாக இருக்க வேண்டும் “ என்று கூறினார்.

இந்த சந்திப்பிற்கு முன்பு செவ்வாய்க்கிழமை கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களை விமர்சித்து டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ கூகுளின் தேடுபொறி வழிமுறைகள் பழமைவாத குரல்களை ஓசையற்றதாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. பழமைவாத குரல்களை கூகுளும், மற்ற நிறுவனங்களும் அடக்கி ஆள்கின்றன. சமூக வலைதளங்களில் நாம் என்ன பார்க்க வேண்டும், வேண்டாம் என்பதை அவர்கள் தான் முடிவு செய்கிறார்கள். இந்த ஆபத்தான சூழ்நிலையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் “ என்று பதிவிடப்பட்டுள்ளது.

கூகுளில் காட்டப்படும் டிரம்ப் சம்பந்தப்பட்ட செய்திகள் அனைத்துமே போலியானதாகவே உள்ளன. அமெரிக்க சூழலை பொறுத்தவரை 98 சதவிகித செய்திகள் டிரம்பிற்கு எதிராகவும், இடது சாரிகளுக்கு ஆதரவாகவும் கூகுளில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, டிரம்ப் கூகுளை விமர்சித்து வருகிறார்.