2019ம் ஆண்டு செப்டம்பரிலேயே கொரோனா பற்றி அறிந்த டிரம்ப்: வெளியான ‘திடுக்’ தகவல்

வாஷிங்டன் : கொரோனா தாக்கம் வெளியுலகம் அறியும் 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்பை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரசால் ஒரு சிலர் பாதிப்படைந்த நிலையில், டிசம்பர் இறுதியில் இது பற்றி உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  ஆனால், அதற்கு 3 மாதங்களுக்கு முன்பே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இதுபற்றி எச்சரிக்கப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

டிரம்பின் நிர்வாகத்தில் பொருளாதார ஆலோசகர்கள் குழு தலைவராக இருந்தவர் பிலிப்சன்.  அவரது குழு 41 பக்க அறிக்கை ஒன்றை 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகைக்கு அனுப்பியது. அதில், உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய தொற்று நோய் பரவும் என்று எச்சரிக்கை செய்தது.

ஆனால், இந்த ஆலோசனை கண்டுகொள்ளப்படவில்லை.பிலிப்சன் கடந்த ஜூன் மாதம் பதவியில் இருந்து விலகினார். அவர் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.

கொரோனா வைரசை முன்பே கண்டறிவது சாத்தியமில்லாதது, அதனை தடுக்க முடியாது என்று டிரம்ப் கூறிய நிலையில், பிலிப்சன் எச்சரிக்கை அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.