பக்ரீத் கொண்டாடும் பணத்தை கேரளாவுக்கு தாருங்கள்!:  இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள்

க்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அதற்காக தாங்கள் செலவழிக்கும் தொகையில் 10 சதவிகிதத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அளிக்க வேண்டும் என இந்திய இஸ்லாமிய மையம் என்ற அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில்  இல்லாத வகையில் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மாநிலத்தில் உள்ள 80க்கும் மேற்பட்ட அணைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளத்தினால் 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலரை காணவில்லை. 3.14 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசும், பல்வேறு மாநிலங்களும், தனியார் அமைப்புகளும், தனிப்பட்ட நபர்களும் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார்கள்.

இந்நிலையில், நாளை இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினருமான மவுலானா காலித் ரஷீத் ஃபாரங்கி, “பக்ரீத் கொண்டாடும் இஸ்லாமிய மக்கள் அதற்காக தாங்கள் செலவழிக்கும் தொகையில் 10 சதவிகிதத்தை கேரள வெள்ள நிவாரண நிதியாக அளிக்க வேண்டும். இத்தொகையை கேரள முதல்வர் நிவாரண நிதியில் சேர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “பக்ரீத் பண்டிகை உண்மையாக அர்த்தத்தில் தியாகத்தை வெளிப்படுத்தும் பண்டிகையாகும். கேரள மாநிலம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நம்முடைய உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது” என்றார்.