தேசிய கட்சிகள் வாரிக்கொண்ட நன்கொடை எவ்வளவு? – 15 ஆண்டு புள்ளிவிபரம் வெளியீடு!

புதுடெல்லி: கடந்த 15 ஆண்டுகளில், இந்தியாவின் தேசியக் கட்சிகள் மொத்தமாக வசூலித்த நன்கொடை ரூ.11 ஆயிரத்து 234 கோடிகள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்தளவு நிதி, ‍எந்தெந்த நிதியாதாரங்களில் இருந்து பெறப்பட்டது என்ற விபரங்கள் தெரியவில்லை.

பாரதீய ஜனதா, காங்கிரஸ், மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், மயாவதியின் பகுஜன் சமாஜ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 7 தேசிய கட்சிகளும் இந்திய தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த வரவு-செலவு கணக்கினை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடைகள், தன்னார்வ பங்களிப்புகள், கூப்பன் விற்பனை, நிவாரண நிதிகள், பொதுக்கூட்டங்களில் திரட்டப்படும் நிதி உள்ளிட்ட பெயர் குறிப்பிடாத ரூ.20,000க்கும் குறைவான நிதிகள், வருமான வரிக்கணக்கைப் பொறுத்தவரை, அறியப்படாத நிதி மூலங்கள் எனப்படுகின்றன.

அந்த வகையில், மேற்கூறிய 7 தேசிய கட்சிகளும் 2004-05 முதல் 2018-19 வரையிலான நிதியாண்டுகளில் அறியப்படாத நிதிமூலங்கள் வழியாக ரூ.11,234.12 கோடி வசூலித்துள்ளன.

கடந்த 2018-19ம் நிதியாண்டில் மட்டும் இந்தக் கட்சிகள் பெற்ற நன்கொடையின் அளவு ரூ.2,512.98 கோடிகள். அதில், மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா பெற்ற நன்கொடை மட்டும் ரூ.1,612.04 கோடிகள். அதாவது மொத்த அளவில் 64% ஆகும்.