டில்லி,

மோடி தலைமையிலான மத்திய அரசு பண பரிவர்தனைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் புதிய யுக்தியை கையாள திட்டமிட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரசியல் கட்சியினருக்கு பெரும் தொழிலதிபர்கள் நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள். இதில் நன்கொடை கொடுப்பவர்கள்  தங்களது பெயர்களை தெரிவிப்பதில்லை. இதன் காரணமாக கருப்பு பணம் நன்கொடையாக மாறி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது.

இந்நிலையில், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுப்பதற்காக ‘தேர்தல் பான்டு’ என்ற புதிய பத்திரத்தை வெளியிட முன்வந்துள்ளது.

இதுகுறித்து கடந்த பட்ஜெட் கூட்டத்தின்போது மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியிருந்த நிலையில், அதற்கான முயற்சியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பத்திரங்களில், பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருப்பதாகவும், அதன்படி கட்சிகள் குறிப்பிட்ட வங்கியில் மட்டுமே பணத்தை செலுத்தி பத்திரங்களை பெற முடியும் என கூறப்படுகிறது.

இந்த பத்திரங்கள் ரூ.1000 முதல் பல்வேறு அளவிலான வடிவில் வெளியிடவும் திட்டமிடப்பட்டு வருவதாக டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.