புதுடெல்லி:
முதல்வர் நிவாரண நிதி  வழங்கப்படும் நன்கொடைகள் சி.எஸ்.ஆருக்கு   செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்றும் அதுவே பிஎம் கேருக்கு அளிக்கப்படும் சி.எஸ்.ஆர்-  செலவாக கணக்கில்  கொள்ளப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள  விளக்கத்தில்,  ‘பி.எம் கேர்ஸ் ஃபண்டிற்கு’ நன்கொடை அளிப்பது,  கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு (சி.எஸ்.ஆர்) செலவாக கணக்கில் கொள்ளப்படும் என்றும்,  ‘முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு’ அல்லது கொரோனாவுக்கான மாநில நிவாரண நிதிக்கு’ நன்கொடைகள் அளித்தால் அது கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு செலவாக கணக்கில் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் நிவாரண நிதி  அல்லது கொரோனாவுக்கான மாநில நிவாரண நிதி போன்றவை  நிறுவனங்கள் சட்டம், 2013 இன் அட்டவணை VII-இல் சேர்க்கப்படவில்லை, எனவே அத்தகைய நிதிகளுக்கான எந்தவொரு பங்களிப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமூக பொறுப்புணர்வு செலவினங்களாக தகுதி பெறாது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

நிறுவனங்கள் சட்டத்தின்படி, குறைந்தது 500 ரூபாய் கோடி நிகர மதிப்பு அல்லது 1,000 கோடி ரூபாய் வருவாய் அல்லது 5 கோடி ரூபாய் நிகர லாபம் உள்ள நிறுவனங்கள் தங்கள் நிகர லாபத்தில் குறைந்தபட்சம் 2 சதவிகிதத்தை சி.எஸ்.ஆருக்கு செலவிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், PM CARES நிதிக்கு வழங்கப்பட்ட பங்களிப்புகள் வருமான வரிச் சட்டம், 1961 (I-T சட்டம்) இன் கீழ் 80G விலக்கு பெற தகுதி பெறும். அதாவது இந்த பங்களிப்புகள் வரி விதிக்கப்படாது. கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு அளித்த பங்களிப்பு சமூக பொறுப்புணர்வு செலவினங்களாக தகுதி பெறும் என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியது.

முதல்வர் நிவாரண நிதிக்கு பதிலாக,   PM CARES நிதிக்கு நன்கொடைகள் கொடுக்க  வேண்டுமா என்ற விவாதம் நடைபெற்று வரும் நேரத்தில் அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.  இதுவரை, PM CARES நிதியிலிருந்து நன்கொடைகள் எங்கு பயன்படுத்தப்பட்டன, தணிக்கை செய்யப்படாவிட்டால், நிதிகளின் கணக்குகள் வழங்கப்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

பிரதமர் நரேந்திர மோடியால் மார்ச் 28 அன்று  பிரதமர் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரணம் (CARES) என்ற நிதி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தனிநபரோ மற்றும் நிறுவனங்களோ கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான நிவாரண முயற்சிகளுக்கு நன்கொடை அளிக்க முடியும்.

கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் போன்ற பல மாநில அளவிலான அமைச்சர்கள், பெரும்பாலான நிவாரண நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதால், பணம் மாநில அரசுக்குச் செல்ல வேண்டும் என்று கருதுகின்றனர்.

“மார்ச் மாத இறுதிக்குள் கூட,  கொரோனாதொடர்பான செலவினங்களுக்காக கூடுதல் நிதியை வழங்குவதற்கு மையம் போதுமானதாக இல்லை. எனவே, இந்த சூழலில், மக்களின் தன்னார்வ பங்களிப்பு மிகவும் தேவைப்படுகிறது மற்றும் முதல்வர் நிவாரண நிதியில் பங்களிக்குமாறு தான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன். இல்லையெனில் பிரதமர் நிதிக்கு பங்களிக்கும் எவருக்கும் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை ”என்று அமைச்சர் ஐசக் தெரிவித்திருந்தார்.

PM CARES நிதியத்தின் வெளிப்படைத்தன்மை   குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ் உட்பட பலர் இந்த நிதியை உருவாக்க வேண்டியதன் அவசியம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இது ஏற்கனவே 3,800 கோடிர ரூபாய் நிலுவைத் தொகையைக் கொண்ட பி.எம்.என்.ஆர்.எஃப் உடன் இணைக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கின்றனர்.

அண்மையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில்,  PM CARES நிதியத்தின் கீழ் உள்ள அனைத்து பணமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு (PMNRF) மாற்றப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் அந்த கடிதத்தில், இது இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு செலவிடப்படும் விதத்தில் அதன் வெளிப்படைத்தன்மை, உறுதி செய்யும் என்றும்,  நிதி விநியோகத்திற்காக இரண்டு தனித்தனி நிறுவனங்களை உருவாக்குவது சரியாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், கார்ப்பரேட் விவகார அமைச்சகம் நிறுவனங்களுக்கு PM CARES நிதியை குறைந்தபட்சமாக நிர்ணயிக்கப்பட்ட தொகைக்கு மேல்,  தாராளமாக பங்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது, .

கடந்த இரண்டு வாரங்களில், PM CARES நிதியம் நிறுவனங்கள், பிரபலங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பெரியளவில் நன்கொடை பெறப்பட்டுள்ளது.  நாட்டின் மிகப் பெரிய வணிக நிறுவனங்களில் சிலவும் பெரும் தொகையை நன்கொடையாக அளித்துள்ளன. குறிப்பாக  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்த நிதிக்கு 500 கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளது. எஸ்பிஐ மற்றும் அதன் ஊழியர்கள் 100 கோடி  ரூபாயையும், என்ஆர்ஐ பில்லியனர் லட்சுமி என் மிட்டல் 100 கோடி ரூபாயையும் நன்கொடையாக அளித்துள்ளார்.