டில்லி

பிரபல கட்டுமான நிறுவனமான அம்ரபாலி குழுமத்தின் மீது விளம்பர ஊதிய பாக்கியை கேட்டு பிரபல கிரிக்கெட் வீரர் தோனி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தியாவில் உள்ள முன்னணி கட்டுமான நிறுவனங்களில் அம்ரபாலி குழுமம் என்னும் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவனம் டில்லியின் சுற்றுபுறப்பகுதிகளான நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புக்களை அமைத்து வந்தது. இந்த நிறுவனத்துக்கு விளம்பர தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் தோனி நியமிக்கப்பட்டிருந்தார். தோனி அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் ஆறு வருடங்கள் தொடர்ந்து தோன்றி வந்தார்.

அம்ரபாலி குழுமம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் தங்கள் வேலைகளை முடிக்காமல் இழுக்கடித்தது. இதனால் இவர்களிடம் வீடுகள் வாங்கியவர்கள் மிகவும் துயருற்றனர். பல இடங்களில் இந்த நிறுவனம் தனது பணியை பாதியில் நிறுத்தி வைத்திருந்தன. சுமார் ஆயிரக்கணக்கானோர் இது குறித்து நீதிமன்றத்தில் அம்ரபாலி குழுமத்துடன் போராடுகின்றனர்.

இதை ஒட்டி உச்சநீதிமன்றம் இந்த நிறுவனம் மற்றும் இதன் துணை நிறுவனங்களின் சொத்துக்கள், வங்கிக் கணக்குகள் உள்ளிட்டவைகளை முடக்கி வைத்துள்ளது. அது மட்டுமின்றி இயக்குனர்களின் சொந்த சொத்துக்களும் முடக்கப்பட்டுளன. இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி உச்சநீதிமன்றத்தில் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கு மனுவில் தோனி, ”இந்த நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தின்படி நான் ஆறு வருடங்களாக விளம்பரங்களில் தோன்றியதற்கான ஊதியம் எனக்கு முழுமையாக வழங்கப்படவில்லை.   எனது முகத்தை காட்டி ஏராளமான பொருள் ஈட்டிய நிறுவனம் எனக்கு தரவேண்டிய தொகையை தராமல் இழுக்கடிக்கிறது.  எனக்கு தரவேண்டிய பாக்கி ரூ, 22.63 கோடி உள்ளது. அதற்கு 10% சாதாரண வட்டியுடன் சேர்ந்து மொத்த தொகை ரூ. 38.95 கோடி ஆகி உள்ளது. இதை உடனடியாக எனக்கு அளிக்க நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்”  என தெரிவித்துள்ளார்.