தஞ்சாவூர்:

சென்னையில் வருபவர்களை யாரும் வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சென்னையில் நோய்த் தொற்று உச்சத்தில் உள்ளது. தமிழகம் முழுவதும்  நேற்று ஒரே நாளில் புதிதாக 2115 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதைத் தொடர்ந்து மொத்தம், 54,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று  ஒரே நாளில் 1322 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38327 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில்  கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19ந்தேதி முதல் 30ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதன் காரணமாக மற்ற மாவட்டங்களில் தொற்று பரவல் தீவிரமாக பரவி வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகமும், தங்களது மாவட்ட எல்லைகளில் தீவிர கண்காணிப்புகளை ஏற்படுத்தி, வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை திருப்பி அனுப்பியும், கடுமையாக சோதனை செய்தும் வருகின்றன.

இந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட  நிர்வாகம், அனைத்துக்கும் ஒருபடி மேலேச்சென்று, சென்னையில் இருந்து வருபவர்களை யாரும் தங்க வைக்கக்கூடாது என்று பொதுமக்களுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது, அனுமதித்ல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டம்  முழுவதும்  தண்டோரோ மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான  வீடியோவில், மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளுக்கு தண்டோரோ போட்டுச் செல்பவர், சென்னையில் வருபவர்களை அனுமதிக்கக்கூடாது இது மாவட்ட கலெக்டர் உத்தரவு என்று எச்சரிக்கை செய்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஒரே மாநிலத்திற்குள்ளேயே, வேறு மாவட்ட மக்களை அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.