இஸ்லாமாபாத்:

‘‘மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹபீஸ் சயீது அரசியல் கட்சி தொடங்க அனுமதி வழங்க கூடாது’’ என்று பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது.

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த பயங்கர தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீது. ஹபீஸ் சயீதை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

வீட்டு சறையில் இருந்து கடந்த மாதம் 24ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கி பொதுத் தேர்தலில் போட்டியிட போவதாக ஹபீஸ் சயீது சமீபத்தில் கடந்த 2ம் தேதி அறிவித்திருந்தார். அவர் அரசியலுக்குள் நுழைவதன் மூலம் காஷ்மீர் பிரச்னை சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியது.

இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் சார்பில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘மில்லி முஸ்லிம் லீக் என்ற அவரது கட்சி சொந்த வழியில் செயல்படும் என்று நம்ப முடியாது என்று புலானய்வு முகமைகள் தெரிவித்துள்ளன.

அதன் தாய் அமைப்புகளான லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தாவா ஆகியவற்றின் செயல்பாடுகளில் இருந்து முற்றிலும் வேறுபடாது. இது போன்ற கட்சிகள் பதிவு செய்யப்பட்டால் வன்முறை மற்றும் அரசியல் தீவிரவாதம் வளரும்’’ என்று தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பரில் மில்லி முஸ்லிம் லீக் கட்சியை அங்கிகரிக்க பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதன் பெயரை தேர்தல் பிரச்சாரங்களில் வேட்பாளர்கள் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்துள்ளது. மேலும், சயீத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அமெரிக்கா அரசு கடந்த வாரம் கவலை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.