நாடென்ன செய்தது உனக்கு என்பதை விட நீ என்ன செய்தாய் என்பது முக்கியம் என்று கூறிய ஜான் எப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட தினம்

ஜான் எப் கென்னடி :

1963, நவம்பர் 22 நண்பகல் 12:30 மணி தனது மனைவியுடன் பயணம் செய்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டார்.

கென்னடியை கொலைசெய்ததாக, ஆஸ்வால்டு எனும் இடதுசாரி கம்யூனிச ஆதரவாளர் ஒரு சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஆஸ்வால்டு இரு தினங்கள் கழித்து (நவம்பர் 24 ம் தேதி) காவல் நிலையத்திலிருந்து சிறைச்சாலைக்கு அழைத்து செல்லும் வழியில், ஜாக் ரூபி எனும் இரவு விடுதி உரிமையாளரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கென்னடியை கொலை செய்த குற்றத்திற்காக பழி தீர்க்கவே ஆஸ்வால்டை கொன்றதாக கூறிய ஜாக் ரூபி 1967 ம் ஆண்டு சிறைச்சாலையில் உயிரிழந்தார்.

மிக இளம் வயதில் (43) அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற கென்னடி, தனது தோற்றத்தாலும் பேச்சுத் திறமையாலும் அமெரிக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.

அவர் அதிபராக இருந்த 1961 முதல் 1963 நவம்பர் வரையிலான சுமார் 3 ஆண்டு காலகட்டத்தில், உலகின் பல்வேறு நாடுகளுடன் தோழமை பாராட்டியதோடு, கம்யூனிசத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

கியூபாவில், பிடல் காஸ்ட்ரோ ஆட்சியை தூக்கியெறிய இவர் எடுத்த முயற்சி தோல்வியுற்றபோதும். சோவியத் யூனியனுக்கு எதிராக பெர்லின் நகரில் சுவர் எழுப்பும் மேற்கு ஜெர்மனியின் முயற்சிக்கு ஆதரவளித்தார்.

1962 ம் ஆண்டு இந்திய சீன போரின் போது இந்தியாவிற்கு ஆதரவாக செயல்பட்ட கென்னெடி, அதுவரை அணிசாரா கொள்கையை கொண்டிருந்த இந்தியாவை அமெரிக்க ஆதரவு நிலைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தார்.

1962 மார்ச் 12 ம் தேதி கென்னடியின் மனைவி ஜாக்குலின் இந்தியா வந்த போது

கம்யூனிசத்திற்கு எதிரான சிந்தனை கொண்ட அமெரிக்க அதிபர் கென்னடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்துக்கப்பட அதிக வாய்ப்பு இருந்த நேரத்தில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டது உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கென்னடி கூறிய வார்த்தைகளில் மிகவும் பிரபலமான ஒன்று “நாடு முன்னேற, நாடு நமக்கு என்ன செய்தது என கேள்வி கேட்பதை விட நாட்டிற்கு நாம் என்ன செய்தோம் என்று கேளுங்கள்” என்பது.