பெங்களூரு:
பெண்கள் விரும்பினால் மட்டுமே இரவு பணிக்கு வரச் சொல்ல வேண்டும். அவர்களை இரவுப் பணிக்கு வரச் சொல்லி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற மகளிர் நலக்குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஸ் தலைமையிலான மகளிர் நலக் குழு தனது பரிந்துரைகளை அரசிடம் அளித்துள்ளது. அதில், தனியார் நிறுவனங்களில் இரவு பணிக்கு வருவதை பெண்களே விரும்பி முடிவும் செய்யும் வகையில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவர்களை இரவு பணிக்கு வர நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

இந்த பரிந்துரைக்கு ஐ.டி பெண் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நாங்கள் எந்த நேரத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதை அரசு உத்தரவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். ‘‘பெண்களுக்கு உதவி செய்யவே அரசு முயற்சிக்கிறது என்று ஹரிஸ் தெரிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு மற்றும் தனித்துவத்தை மதிக்கும் வகையில் ஐ.டி மற்றும் பயோ டெக்னாலஜி துறையில் காலை அல்லது மதிய நேரங்களில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்’’ என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் நல குழுவின் 32வது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘‘இந்த குழு பெங்களூருவில் உள்ள இன்போசிஸ், பயோகான் ஆகிய அலுவலகங்களை நேரில் பார்வையிட்டது. ஊழியர்கள், நிர்வாகத்தினர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. பெரும்பான்மையான பெண்கள் இரவுப் பணி பார்க்க விரும்பவில்லை என்று தெரிவித்தனர். அதனால் இத்தகைய பரிந்துரைகளை அளித்தோம்’’ என்றார் ஹரிஸ்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘பெண்களுக்கு வீட்டிலும், சமூகத்திலும் அதிக பொறுப்புகள் இருக்கிறது. இரவுப் பணியால் குழந்தைகளை பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. குழந்தைகளை தந்தை பார்த்துக் கொள்வார் என்றாலும், குழந்தைகளுக்கு இரு பெற்றோரது கண்காணிப்பும் அவசியமாகும்.

இரவு பணியில் பெண்கள் ஈடுபடுவதற்கு நான் அல்லது குழுவினரோ எதிரானவர்கள் கிடையாது. இரவு பணியை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு வழங்க வேண்டும்’’ என்று தான் பரிந்துரை செய்துள்ளோம்.

‘‘இரவு பணி புரிய பெண்களுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யவில்லை. வீடுகளில் அதிக பொறுப்புகள் பெண்கள் மீது தான் விழுகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்துதலை மீடியாக்கள் பெரிது ப டுத்துகின்றன.

எனினும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களது கடமையாகும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் எதற்காக எங்களை மக்கள் தேர்வு செய்தார்கள்?’’ என்று ஹரிஸ் கேள்வி எழுப்பினார்.

பெங்களூரு ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் 32 வயதான மூன்று வயது ஆண் குழந்தையின் தாய் பிரசித்தா கூறுகையில்,‘‘ கடந்த 7 ஆண்டுகளாக நான் இரவு பணியாற்றுகிறேன். எனது வாழ்வில் இதனால் பெரிய பிரச்னை எதுவும் வரவில்லை. நானும், எனது கணவரும் இரவு பணியாற்றி வருகிறோம். சமயங்களில் குழ ந்தையை யார் பார்த்துக் கொள்வது என்ற சிறிய பிரச்னை தான் வரும். நிறுவனத்தினர் காரில் வீட்டில் இரு ந்து அழைத்துச் சென்று பின்னர் கொண்டு வந்து விட்டுவிடுவதால் எந்த பிரச்னையும் இல்லை’’ என்றார்.

பெல்லந்தூரியல் பணியாற்றும் சமன்வித்தா என்ற 24 வயது பெண் கூறுகையில்,“ இது பெண்களை ஒடுக்க ஆண்கள் மேற்கொள்ளும் வகையிலான முயற்சியாகும். பணியாற்றும் இடங்களில் பெண்களுக்கு சம உரிமை வழங்க மறுக்கும் வகையில் மக்கள் மனதில் இத்தகைய நிலைப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.

தற்போது அரசு இதை கொண்டு வர முயற்சிக்கிறது. இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டால் பெண்களை வேலைக்கு சேர்க்க நிறுவனங்கள் தயக்கம் காட்டும். நான் பணி செய்ய வேண்டிய நேரத்தை அரசாங்கம் எப்படி நிர்ணயம் செய்யலாம். என்னால் முடிந்தால் நான் இரவு பணியாற்றவுள்ளேன். ஆண் ஒருவர் தலைமையில் இயங்கும் பெண்கள் நலக்குழு இத்தகைய பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இத்தகைய குழுவை அமைத்த அரசுக்கு பாராட்டுக்கள்” என்றார்.