டெல்லி: கொரோனா தடுப்பூசி பற்றிய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் தடுப்பூசி பணிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

உலகில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து இயக்கம் நாட்டில் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து குறித்து வெளியாகும் வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தடுப்பூசிகள் பாதுகாப்பானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் 81 தடுப்பூசி மையங்களில் 8,100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களுடன் பேசினேன். யாருக்கும் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை என்று தெரிகிறது என்று கூறினார்.