வதந்திகளை நம்ப வேண்டாம்! அன்வர் ராஜா வேண்டுகோள்

சென்னை:

தான் திமுகவுக்கு செல்வதாக வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிமுக முன்னாள் எம்.பி.யும், சிறுபான்மை பிரிவு தலைவருமான அன்வர் ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதிமுக, அமமுகவில் இருந்து ஏராளமானோர் திமுகவுக்கு தாவி வரும் வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி.யான அன்வர் ராஜாவுக்கு திமுகவுக்கு போகப்போவதாக செய்திகள் வெளியானது.

முத்தலாக், காஷ்மீர் விவகாரம் போன்ற முக்கிய மசோதாக்களில், மத்தியஅரசுக்கு ஆதரவாக தமிழக அதிமுக அரசு செயல்பட்டு வருவதால், அதிமுக தலைமைமீது அதிருப்தியில் உள்ள அன்வர்ராஜா அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய இருப்பதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.

இந்த தகவல் குறித்து, திமுக, அதிமுக கட்சிகளோ, அன்வர் ராஜாவோ பதில் தெரிவிக்காமல் இருந்து வந்ததால், வதந்தி உண்மையாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், வதந்திகளை  நம்ப வேண்டாம், நான் உயிர் உள்ளவரை புரட்சிதலைவரின் ரசிகனாக, புரட்சிதலைவியின் உண்மை தொண்டனாக என்றும் கழக பணியில் தொடர்வேன் என்று அன்வர்ராஜா விளக்கம் அளித்துள்ளார்.

தான்  திமுகவிற்கு செல்வதாக எதிர்க்கட்சியைச் சார்ந்தவர்கள் ஒரு பொய்யான தகவலை சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர், இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அன்வர் ராஜா மறுப்பு தெரிவித்து உள்ளர்.