நேபாள பிரதமர் ராமரை அரசியலுக்குள் இழுக்க வேண்டாம் : அயோத்தி சன்னியாசிகள் அறிவுரை

யோத்தி

ராமர் நேபாள நாட்டவர் எனவும் அயோத்தி நேபாளத்தில் உள்ளது எனவும் நேபாள பிரதமர் சர்மா ஒளி தெரிவித்ததற்கு அயோத்தி சன்னியாசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து நேபாளம் நடந்து வருகிறது.  எல்லையில் சாலை அமைக்க தடை, கொரோனாவுக்கு இந்தியாவைப் பொறுப்பாக்கியது எனப் பலமுறை நேபாளம் கூறியது.  சமீபத்தில் இந்தியாவுக்குச் சொந்தமான எல்லைப் பகுதிகளை தங்கள் நாட்டில் இணைத்து அந்நாட்டு பிரதமர் சர்மா ஒளி வெளியிட்ட வரைபடத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.  இது இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேபாள பிரதமர் சர்மா ஒளி உண்மையில் அயோத்தி நேபாளத்தில் உள்ளதாகவும் இந்தியாவில் இருப்பது அசல் அல்ல எனவும் தெரிவித்தார்.  மேலும் அவர் நேபாளத்தில் உள்ள ஜனகபுரியில் சீதையை ராமர் திருமணம் செய்துக் கொண்டதால் எவ்வித தொலைத் தொடர்பு வசதியும் இல்லாத அக்காலத்தில் எவ்வாறு திருமண பேச்சு  நடந்திருக்கும் எனக் கேள்வி எழுப்பினார்.   இது இந்தியாவில் பலருக்கு மேலும் கோபத்தை அளித்துள்ளது.

நேபாள பிரதமருக்குக் காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர் தனது டிவிட்டரில் நேபாள பிரதமருக்கு மனநிலை பிறழ்ந்துள்ளதாக விமர்சித்தார்.  அவ்வகையில் அயோத்தியில் உள்ள ராம் ஜன்ம பூமி சேத்திர அறக்கட்டளை தலைவர் மகந்த் நிருத்திய கோபால் தாஸ், விஸ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளர், அனுமன்கார்கியை சேர்ந்த ராஜு தாஸ் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ராம் ஜன்மபூமி சேத்திர தலைவர் மகந்த் நிருத்ய கோபால் தாஸ், “நேபாள பிரதமர் அவருடைய உள்ளூர் அரசியலில் ராமரை இழுக்க வேண்டாம்.  ராமர் ஒரு சக்கரவர்த்தி என்பதையும் அவர் ஆட்சியின் கீழ் நேபாளம் இருந்தது எனவும் பிரதமர் அறிந்துக் கொள்ள வேண்டும்.  இந்திய நேபாள உறவு சரித்திர காலங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளர் சரத் சர்மா, “சீனாவின் ஆதரவைப் பெற நேபாள பிரதமர் அடிப்படையற்ற ஆதாரமற்ற அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். இந்த அறிக்கைகள் மிகவும் அபத்தமாக உள்ளன.  அனைத்து மத நூல்களிலும் ராமர் இந்தியாவில் அயோத்தி நகரில் பிறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. என கூறியுள்ளார்.

அனுமன் கார்க்கியைச் சேர்ந்த ராஜு தாஸ், “நேபாள பிரதமருக்கு தற்போது எதிர்க்கட்சிகளால் கடும்  பிரச்சினை உள்ளது.  அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டு வருகிறது.  எனவே அவர் வேறு வழியில்லாமல் மக்களைத் திசை திருப்ப இந்த அரசியல் ஆயுதத்தை எடுத்துள்ளார்.   அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதை உச்சநீதிமன்றமே ஒப்புக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.