சென்னை:

ஐபிஎல் கோப்பையை வெல்வதை வைத்து என்னை எடை போட்டால் எனக்கு கவலையில்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஐ.பி.எல் கோப்பையை பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி வெல்லாதது குறித்து விமர்சனம் செய்து இருந்தார்.

அவர் கூறும்போது, ஐ.பி.எல். கோப்பையை வீராட் கோலி வெல்ல வில்லை. ஆனாலும் அவர் பெங்களூர் அணி கேப்டனாக நீடிக்கிறார். இது அதிர்ஷ்டம் தான். இதற்காக அவர் பெங்களூரு ராயல் சேலஞ்சர் அணி நிர்வாகத்துக்கு நன்றிக் கடன் பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.

 

இந்நிலையில் காம்பீர் கருத்துக்கு பதில் அளித்து விராட்கோலி அளித்த பேட்டியில், “ஐ.பி.எல். கோப்பையை வெல்லவில்லை என்பது எனக்கு ஏதோ வெறுப்பை தருகிறது என்று கூறுவது தவறு. நிச்சயம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம்.
நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதை செய்கிறேன். ஐ.பி.எல். கோப்பையை வெல்வது அல்லது வெல்வதில்லை என்பதை வைத்து என்னை எடைபோட்டால் அதுபற்றி கவலையில்லை. அளவு கோல்களை யாரும் நிர்ணயிக்க முடியாது.

எனது வேலை சிறப்பாக ஆடுவது தான். எல்லா கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால் பல நேரங்களில் அது நடப்பதில்லை.
நாங்கள் ஏன் வெல்லவில்லை என்பதை எதார்த்தமாக யோசித்து பார்க்க வேண்டும்.

எனக்கு கேப்டன் என்ற பொறுப்பு உள்ளது. ஐ.பி.எல். கோப்பையை வெல்வது எனக்கு பிடித்தமானது தான். அதை சாதிக்க இந்த விமர்சனங்கள் உதவினால் நல்லது.

நாங்கள் 5 அரை இறுதி ஆட்டங்களில் விளையாடி உள்ளோம். நாங்களும் கோப்பைக்கு அருகில் வந்துள்ளோம். கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி தான். நல்ல முடிவுகளை எடுத்தால் அதனை தாண்டியும் செல்லலாம்” என்றார்.