சசிகலாவை விமர்சிக்க வேண்டாம்: அடக்கி வாசிக்க உடன்பிறப்புகளுக்கு தி.மு.க. உத்தரவு

சென்னை:

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இணையத்தளங்களிலோ பொது வெளியிலோ உடன்பிறப்புகள் யாரும் சசிகலாவை விமர்சிக்க வேண்டாம் என தி.மு.க தலைமை ரகசிய உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை, வானகரத்தில் அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. பொதுக்குழு நடக்கும் இடத்தில் பிரச்னை ஏதும் வந்துவிடக் கூடாது என கட்சியின் சீனியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனித்து வந்தனர். எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்யப்ப்டடார்.

பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்த பொதுக்குழு முடிவை தெரிந்துகொள்வதில் அதிமுக.வினரை விட திமுக.வினரே அதிக ஆர்வமாக இருந்தனர். முடிவுகள் வெளியான நேரத்தில், தி.மு.க நிர்வாகிகளைத் அறிவாலய நிர்வாகி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினாராம் அ.தி.மு.க நிர்வாகிகள் ஒன்றுகூடி தலைமைப் பதவிக்கு சசிகலாவை முன்மொழிந்துள்ளனர். இது அவர்களுடைய உள்கட்சி விவகாரம். உடனே, ‘இவர் எல்லாம் பொதுச் செயலாளர் ஆகலாமா என பொதுவெளியில் யாரும் பேசிக் கொள்ள வேண்டாம். இணையத்தளத்தில் கருத்துப் படங்கள் பதிவிடும்போதும் அவரைத் தாக்கும்விதமாக எதையும் செய்ய வேண்டாம். பதிலுக்கு அவர்கள் தரப்பில் இருந்து எதிர்வினைகள் கிளம்பினால், தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும் எனத் தெரிவித்திருக்கிறார். இதனால் திமுகவினர் அடக்கி வாசித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.