சென்னையில் ‘பெளவ் பெளவ்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெற்றது . அதில் கலந்து கொண்டு பேசிய அபிராமி ராமநாதன், “முன்பெல்லாம் தொலைக்காட்சிகள் சினிமா துறைக்கு சவாலாக அமைந்தது. தற்போது செல்போன்கள் அதைவிடவும் சவாலாக இருக்கிறது. ஒரு திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே நெட்பிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு விடுவதால், தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்துவிட்டது.

டிஜிட்டல் நிறுவனங்களுக்கு படங்களை விற்க வேண்டாம், என்று சொல்லவில்லை. படம் வெளியாகி மூன்று மாதத்திற்குப் பிறகு கொடுங்கள், உடனே கொடுப்பதால் திரையரங்கங்கள் பாதிக்கப்படுகிறது என கூறினார்.

பல கோடிகளை செலவிட்டு நீங்கள் எடுக்கும் பிரம்மாண்ட படங்களை சிறிய திரையில் பார்த்தால் மக்கள் எப்படி ரசிப்பார்கள், திரையரங்கில் பார்த்தால் தான் ரசிப்பார்கள். அது தான் அந்த படத்திற்கும் கெளரவம். எங்களாலும் தொழில் செய்ய முடியும். இன்று சினிமா வளர்ந்ததற்கு காரணமே திரையரங்கங்கள் தான், அப்படி இருக்க அந்த திரையரங்குகளை தயாரிப்பாளர்கள் தற்போது மறந்துவிட்டு டிஜிட்டல் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிக்கிறது.

திரையரங்கங்கள் உங்களது மனைவி போல, டிஜிட்டல் நிறுவனங்கள் என்பது வப்பாட்டி போல. வப்பாட்டியிடும் போங்க, எப்போவாவது போங்க, ஆனால், மனைவி தான் எப்போதும் முக்கியம். அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். எங்களை கைவிட்டு விடாதீர்கள்.” என்று கெஞ்சம் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.