போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடு செல்லாதீர்: இலங்கை தொழிற்சங்க பிரமுகர் வேலாயுதம் ருத்ரதீபன்

லங்கை கண்டி மாகாணத்தில் தேயிலைத்தோட்டங்கள் நிரம்ப உண்டு.  இந்தியாவில் இருந்து வெள்ளையர் ஆட்சியில் கொண்டு செல்லப்பட்ட மக்கள்தான் அங்குள்ள தோட்டங்களில் கூலியாட்களாக பணி புரிகிறார்கள். வறுமை காரணமாக, சிலர்  வளைகுடா நாடுகளுக்கு வீட்டு வேலை செய்ய செல்கிறார்கள். அவர்களில் சிலர் அதிர்ச்சி ஏற்படுத்தத் தக்க வகையில் மரணமடைகிறார்கள்.

சமீபத்தில் அப்படி மரணமடைந்தவர் பழனியாண்டி கற்பகவள்ளி.

இந்த சோகம் குறித்து இலங்கை தொழிற்சங்க பிரமுகர் வேலாயுதம் ருத்ரதீபன் (Deepa Velayudam  ) தெரிவித்தாவது:

“இலங்கை பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வாழ்வாதார பிரச்சனைகள் தொடர்ந்தே வருவதால் மேலும் பல பிரச்சனைகளையும் உயிரிழப்புக்களையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டு வருகின்றோம்.இவ்வாறான நிலையை; உணர்வதற்கான விடயங்களை தினம் தினம் நாம் அனுபவித்தும் வருகின்றோம்.

சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று அங்கு உயிரிழந்ததாக கூறப்படும் மஸ்கெலியா ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்ட பழனியாண்டி கற்பகவள்ளியின் சடலம் 5 மாதங்களுக்கு பிறகு இலங்கையில் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்டது.குறித்த விடயத்தை செய்தியாகவும் கதையாகவும் யார் வேண்டமானாலும் பார்க்கலாம் ஆனால் எமது மலையக மக்களை பொருத்தவரை மிகப்பெரும் துயராக இந்நிலை தொடர்ந்து வருகின்றது

இந்த பெண் மஸ்கெலியாவிலிருந்து தனது குடும்ப வறுமையின் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக சவூதி அரேபியா நாட்டின் றியாத் பிரதேசத்தில் ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றியுள்ளார்.
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற இவர் சவூதி அரேபியா றியாத் ஒலேய்யா பபா என்ற தடுப்பு முகாமில் தடுத்து வைத்த நிலையில் உயிரிழந்து போயுள்ளதாக அங்கிருந்து உறவினர்களுக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
5 மாதங்கள் கடந்த பின் குறித்த பெண்ணின் உடலம் 25.03.2017 அன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு 27.03.2017 அன்று இரவு கொழும்பில் வைத்து உறவினர்களிடம் கையளிக்கபட்டுள்ளது.

உண்மையிலேயே நாம் யாவரும் நன்றாக சிந்தித்து செயல்படவேண்டிய தருணத்தில் இருக்கின்றோம் காரணம் மலையகத்தவரின் உயிரின் விலை மிக மிக குறைவானதாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது.
மலையக பெண்கள் என்போர் இந் நாட்டின் முக்கிய பிரஜைகளாக விளங்குகின்றனர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்காக உச்சக்கட்ட பங்களிப்பினை இவர்கள் வழஙகுகின்றனர்.

இப்பெண்கள் பல துறைகளிலும் பங்கேற்று நாட்டின் வருவாயை அதிகரிக்கச் செய்து வருகின்றனர். இவற்றுள் தேயிலைத் தொழிற்துறை, ஆடைத் தொழிற்துறை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பன குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. தன்னை உருக்கிக் கொண்டு நம் பெண்கள் நாட்டின் உயர்வுக்காக பாடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை என்பது இன்று எமது நாட்டிற்கு கூடுதலான வருமானத்தை ஈட்டித் தருகின்ற ஒரு துறையாக மாற்றமடைந்திருக்கின்றது. கூடுதலான நபர்கள் வெளிநாட்டு தொழிலில் மோகம் கொண்டு பலவித தொழில்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். வருடாவருடம் வெளிநாடுகளுக்கு செல்வோரின் தொகையில் அதிகரித்த நிலைமையையே காண முடிகின்றது.

ஆனாலும் நமது மலையக பெண்கள் தவறான வழிகாட்டி முகவர்களிடமும்,கொடுமையான வெளிநாட்டு குடும்பங்களிலும் சிக்கி பெருந்துயருக்கு ஆளாகி வருவதை நாம் அண்மைகாலங்களில் அதிகமாக உணர்கின்றோம்.

மலையக பெண்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு செல்வதன் காரணமாக சம்பந்தப்பட்ட பெண்களும் அவர்தம் குடும்பத்தினரும் பாதக விளைவுகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லும் சிலரின் வாழ்க்கை திசைமாறிப்போய் விடுகின்றது. உழைப்பின் மூலமாக பெரும் பணத்தை திரட்ட வேண்டும், குடும்பத்தின் உயர்வுக்கு வித்திட வேண்டும் என்று கனவு கண்ட சில பெண்களின் வாழ்க்கை கல்லறையில் முடிந்துவிடுகிறது.

சூடு வைத்தல், ஆணி அறைதல், சுடுநீரை ஊற்றி கொடுமைப்படுத்துதல், அடித்தல் உதைத்தல் என்று பல இன்னல்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் சில பெண்கள் உள்ளாகி வருகின்றார்கள். அத்துடன் எஜமானர்களின் பாலியல் சித்திரவதைகளுக்கும் இப்பெண்கள் ஆளாக வேண்டி இருக்கின்றது. இப்பெண்கள் எஜமானர்களின் வீடுகளில் இருந்தும் வெளியேறி தஞ்சம் புகுந்துள்ள சில இடங்களிலும் பாலியல் ரீதியான தொல்லைகளுக்கு உட்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தமை தொடர்பில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு கருதி சென்ற சில பெண்களின் இறப்புகள் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்நிலை தொடர்ந்துக் கொண்டே இருப்பது ஆரோக்கியமான விடயமல்ல.

இந்நிலையில் மலையகத்தில் இருந்து வெளிநாட்டிற்கு பணிப்பெண்களாக செல்வோரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் மாற்று வாழ்வாதாரத்தை கண்டடைய வேண்டுமென்றும் தற்போது கோரிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.அத்துடன் அரசாங்கமும் பாவிக்கபடாது மலையகத்தில் காணப்படும் தரிசுநிலங்களை விவசாயம் மற்றும் ஏனைய தொழில் பயன்பாட்டிற்கு மலையகத்தவர்களுக்கு வழங்குவதற்கு ஆவண செய்யவும் வேண்டும்

ஆகவே கற்பகவள்ளியின் மரணம் கடைசி மரணமாக இருக்க வேண்டும் என்பதோடு இவரின் 3 பிள்ளைகளின் கல்விக்கும் வாழ்விற்கும் அரசியல் தலைவர்கள் உட்பட சமூக ஆர்வலர்கள் உதவிபுரிவதோடு வெளிநாட்டு மோகத்தை விட்டு சுயதொழில் மற்றும் நம்நாட்டிலேயே தொழில் புரிவதான கலாசாரத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published.