முட்டாள்கள் உலகத்தில் வாழாதீர் : பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்

முசாபராபாத்

காஷ்மீர் விவகாரத்தில் ஐநா பாதுகாப்புப் படையை நம்ப வேண்டாம் எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி கூறி உள்ளார்.

கடந்த வாரம் இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கம் செய்து அந்த பகுதிகளை இந்திய அரசின் யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதற்குப் பாகிஸ்தான் நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து காஷ்மீர் மக்களுக்கு உதவ வேண்டும் எனப் பல உலக நாடுகளிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது. அதற்குப் பல உலக நாடுகள் செவி சாய்க்கவில்லை.

இஸ்லாமிய நாடுகளான அரபு நாடுகள் உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன. மேலும் அமெரிக்காவும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவிக் கரம் அளிக்கவில்லை. இது பாகிஸ்தானுக்கு கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் பகுதியில் பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “காஷ்மீர் விவகாரத்தில் நாம் உணர்ச்சிகரமாகச் செயல்படுவது எளிதானது, எதிர்ப்பது மிகவும் எளிதானது. ஆனால் இந்த விவகாரத்தை மற்றவர்களுக்குப் புரியவைத்து மேலே எடுத்துச் செல்வது மிகவும் கடினமானது. பல இஸ்லாமிய நாடுகள் தங்கள் வர்த்தக நலனுக்காக இந்தியாவை ஆதரித்து வருகின்றன. அந்த நாடுகள் இனி காஷ்மீரில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்னும் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளன.

இந்த விவகாரத்தை ஐநா பாதுகாப்புக் குழுவுக்கு எடுத்துச் செல்லலாம் என பலர் கூறுகின்றனர். ஆனால் அங்கு பி 5 உறுப்பினர்களில் ஒரு நாடான இந்தியாவுக்கு எதிராக அவர்கள் செயல்படுவார்கள் என நம்புவது முட்டாள் தனமானது. தயவு செய்து முட்டாள்கள் உலகத்தில் வாழாதீர்கள். அந்த முட்டாள்தனமான நம்பிக்கைகளை விட்டொழித்து விட்டு வெளியே வாருங்கள்” எனக் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Fools paradise, Kashmir, Pakistan, Shah muhammed qureshi, UNSC
-=-