’’காதலிக்காதே …கவலைப்படாதே.’’ மாணவிகளுக்கு அட்வைஸ் செய்த முதல்வருக்கு சிக்கல்.

பாடம் கற்றுக்கொடுப்பதை விட இப்போது உள்ள கல்லூரிகள், வேண்டாத காரியங்கள் செய்வதில் கண்ணும் கருத்துமாக உள்ளன.

அண்மையில் குஜராத் மாநில கல்லூரி ஒன்று மாணவிகளின் மாதவிடாய் நாட்களை கண்டறிய, அவர்களின் ஆடையை களைந்து சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்போது ஆந்திரா மாநிலத்தில் இன்னொரு சர்ச்சை வெடித்துள்ளது. அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் அண்மையில் நாட்டு நலப்பணி இயக்க (என்.எஸ்.எஸ்) முகாம் நடந்துள்ளது. முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் விநோதமான சபதம் ஒன்றை மேற்கொள்ள இரு பேராசிரியர்கள் பணித்துள்ளனர்.

‘’நான் காதலிப்பது போன்ற காரியங்களை செய்ய மாட்டேன். காதல் திருமணமும் செய்ய மாட்டேன்’’ என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ள மாணவிகள், நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ந்து போன மாணவிகள் வேறு வழியில்லாமல் அவ்வாறே ‘சபதம்’ எடுத்துக்கொண்டனர். விஷயம் வெளியில் கசிந்து பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. கல்லூரி நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.

இந்த சபதத்தின் பின்னணியில் கல்லூரி முதல்வரே இருந்தது தெரியவந்தது. அவர் தான், பேராசிரியர்களை தூண்டி விட்டு, இப்படி ஒரு உறுதி மொழி எடுக்கச்செய்துள்ளார்.

இதையடுத்து, முதல்வரையும், 2 பேராசிரியர்களையும் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது, கல்லூரி நிர்வாகம்.
‘ட்விஸ்ட்’ என்பது சினிமாவுக்கு மட்டும் தான் இருக்க வேண்டுமா?

செய்திக்கு இருக்கக்கூடாதா? இப்போது, ‘ட்விஸ்ட்’.

‘காதலிக்க மாட்டேன்’’ என்று சபதம் செய்த மாணவிகளில் ஒருவர், சில தினங்களுக்கு முன்னர் தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டார். அவர்கள் கோயிலில் திருமணமும் செய்துள்ளனர்.
விஷயம் அறிந்து அதிர்ந்து போன மாணவியின் தந்தை, தனது மகளை அந்த இளைஞன் ஏமாற்றி திருமணம் செய்து விட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார். வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை –காதல் ஜோடியை தேடி வருகிறது.

-ஏழுமலை வெங்கடேசன்