” கோவிலுக்கு செல்ல பாஜகவிடம் அனுமதி பெற தேவையில்லை, அவர்களை காட்டிலும் இந்து மதம் மேலானது ”- ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோவிலுக்கு செல்வதற்கு பாஜகவிடம் அனுமதி வாங்க வேண்டுமென்ற அவசியம் இல்லை எனவும், கங்கிரஸ் கட்சி இந்துவா கட்சி அல்ல, அது இந்து மதக்கட்சி என கூறியுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தி செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளார்.

rahul

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மத்திய பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வபோது, அங்குள்ள கோயில்களுக்கு இந்து மதம் சார்ந்த ஆடைகளை அணிந்தபடி சென்று வருகிறார். இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய ராகுல் காந்தி,

” கோயில்கள் என்ன பிரதமர் மோடியின் தனிப்பட்ட சொத்துக்களா? பிரதமர் மோடியும், அமித் ஷாவும் மட்டும் தான் கோயில்களுக்கு செல்ல வேண்டுமா. நானும், கமல்நாத்தும், சிந்தியாவும் கோயிலுக்குச் செல்லக்கூடாதா. நாங்கள் கோயிலுக்குச் சென்றால் அரசியல் என கூறுகிறார்கள்.

காங்கிரஸ் இந்துத்துவா கட்சியல்ல. அதேசமயம் இந்து மதக்கட்சி. நான் இந்துத்துவா அரசியல்வாதி அல்ல. அதேசமயம் தேசியவாதி. அனைத்து தரப்பு மக்களையும், பல்வேறு மொழி, மதம், ஜாதி சார்ந்த மக்களையும் அரவணைத்துச் செல்வேன். இதுவே காங்கிரஸின் பழக்கம்.

இந்து மதம் என்பது முற்போக்கானது, சுயமான சிந்தனைக்குரியது, அனைவரையும் அரவணைத்துச் செல்வது, வ்ன்முறை, கோபம், வெறுப்புணர்ச்சிக்கு எதிரானது. ஆனால் பாஜகவின் இந்துத்துவா கோபம், வெறுப்பு, பாதுகாப்பின்மை கொண்டுள்ளது. சுயநம்பிக்கையும், மற்றவர்களின் உரிமை நம்பிக்கையையும் மதிப்பதே இந்து மதம். எனவே தான் நாங்கள் இந்துமதக் கட்சி, இந்துத்வா கட்சி அல்ல என்கிறோம்.

கடவுளை வழிபடுவதற்கு விரும்பி நான் இங்கு வந்துள்ளேன். கோவிலுக்கு வருவதற்கு நான் பாஜகவிடம் அனுமதி பெற வேண்டியதில்லை. இந்து மதம் பாஜகவினரை காட்டிலும் சிறந்தது “ என்று கூறினார்.

மேலும், சபரிமலை விஷயத்தில் கேரள காங்கிரஸ் அனைத்து வயது பெண்களும் செல்ல எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சபரிமலை விவகாரத்தை பொறுத்தவரை அது உணர்வு சார்ந்த விஷயம், எனது நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட நிலைப்பாட்டை கேரள காங்கிரஸ் எடுத்துள்ளது உண்மை தான் என கூறினார்.