அரியலூர்,

நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் எடுத்தும் மருத்துவ படிப்பு கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அரசு அறிவித்த 7 லட்சம் ரூபாயை அனிதாவின் உறவினர்கள் வாங்க மறுத்து ஆட்சியரை திரும்பி அனுப்பிவிட்டனர்.

மேலும்,  நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நாங்கள் உதவித் தொகையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று ஆவேசமாக  கூறி ஆட்சியரிடம் இருந்து உதவித்தொகைய வாங்க மறுத்துவிட்டார்  அனிதாவின் சகோதரர்.

மத்தியஅரசின் வஞ்சகம் காரணமாகவும், தமிழக அரசின் கையாலாகததனத்தாலும் , இந்த ஆண்டு தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் என்று கடைசி வரை கூறி வந்த மத்திய மாநில அரசுகள், கடைசி நேரத்தில் காலை வாரியதால், பெரும்பாலான மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு கானல்நீராக மாறியது.

இதையடுத்து கடும் மன உளைச்சலுக்கு ஆளான  அரியலூர் குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் தமிழக முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ‘அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும். அனிதாவின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும். மாணவ, மாணவிகள் இதுபோன்ற விபரீத முடிவை எடுக்க வேண்டாம். மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும் உறுதுணையாகவும் அரசு செயல்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அனிதாவின் உறவினர்களிடம் அரசு அறிவித்த ரூ.7 லட்சத்துக்கான காசோலை வழங்க முன்வந்தார்.

ஆனால், அனிதாவின் உறவினர்கள் முதல்வரின் உதவித்தொகையை வாங்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

அப்போது அனிதாவின் சகோதரர், ‘என் தங்கைக்கு ஏற்பட்ட நிலைமை வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது. நீட் விவகாரத்தில் சாதகமான முடிவை அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நாங்கள் உதவித் தொகையை ஏற்றுக் கொள்கிறோம்’ என்று மாவட்ட ஆட்சியரிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் நிவாரணம் கொடுக்காமல் திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது.