சட்டம் ஒழுங்கு நிலை பற்றி எங்களுக்கு பாடம் நடத்த வேண்டாம்….யோகிக்கு சித்தாராமையா பதிலடி

பெங்களூரு:

‘‘சட்டம் ஒழுங்கு குறித்து எங்களுக்கு பாடம் நடத்த வேண்டியது கிடையாது’’ என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு கர்நாடகா முதல்வர் சித்தாராமையா பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. குஜராத், இமாச்சல் மாநில சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றதை தொடர்ந்து, கர்நாடகாவிலும் வெற்றி பெறுவதற்கான செயல்பாட்டில் அக்கட்சி தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.

இந்த வகையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தற்போது கர்நாடகாவில் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். ஹூப்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘‘ காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மாற்றம், முன்னேற்றம் ஏற்படுத்த பா.ஜ.க.வால் மட்டுமே முடியும். எதிர்வரும் தேர்தலில் திப்பு சுல்தானை தேர்வு செய்ய வேண்டுமா? அல்லது கடவுள் ஹனுமாரை தேர்வு செய்ய வேண்டுமா? என்பது வாக்காளர்கள் கையில் கையில் தான் உள்ளது.

இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். மோடியின் கனவு காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்குவது தான். இதற்கு கர்நாடகா மக்கள் வாய்ப்பு அளிக்க வேண்டும். பா.ஜ.க.வுக்கு வாக்களித்து காங்கிரஸை மண்ணை கவ்வ செய்ய வேண்டும். இங்கு சாதாரண மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது’’ என்றார்.

யோகி ஆதித்யநாத்தின் பேச்சுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தை விட, நான் சிறந்த இந்து. எனது பெயரிலேயே, ‘சித்த’ மற்றும் ‘ராமா’ என்று உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் எல்லா மதங்களையும் மதிப்பவர்கள். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்கள். அதுவே எங்கள் பண்பாடு. அதுதான் உண்மையான இந்துத்துவா கொள்கை.

இந்து, இந்து என்று கூறும் பா.ஜ.க.வினர் தான், இந்துக்களின் ஏகபோக உரிமையாளரா? அ க்கட்சியில் இருப்பவர்கள் தான் இந்துக்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் யார்? பா.ஜ.க.வினர் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற மதகலவரத்தை தூண்ட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அவர்களின் கனவு பலிக்காது. மேலும், கர்நாடகா சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆதித்யாநாத் பேசியுள்ளார். இதற்கு உதாரணமாக அவரது உ.பி. மாநிலம் உள்ளது. அதனால் இந்த விஷயத்தில் அவர் எங்களுக்கு எந்தவிதமான பாடத்தையும் நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை’’ என்றார்.