அதிகரிக்கும் காற்று மாசு: யாரும் பயப்பட வேண்டாம் என அமைச்சர் அறிவிப்பு

சென்னை : காற்று மாசால் சென்னை மக்கள் பயப்பட வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

வட மாநிலங்களை புரட்டி போட்ட காற்றின் மாசு, காற்றின் வேகத்தில் படிப்படியாக நகர்ந்து சில நாட்களாக சென்னையை சூழ்ந்திருக்கிறது. அதன் காரணமாக சில நாட்களாக காற்றின் மாசு அதிகரித்துள்ளது.

ஆலந்தூர், வேளச்சேரி, மணலி என பல பகுதிகளில் காற்றின் மாசு அதிகரித்து காணப்படுகிறது. அதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந் நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வருவாய்த்துறை அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என்று கூறியிருக்கிறார். காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

கூட்டத்தில்  அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

சென்னையில் காற்று மாசு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒருவாரமாக காணப்பட்டது பனியா அல்லது காற்று மாசா என்பது குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் அது காற்று மாசே என்பது தெரிய வந்துள்ளது.

அதற்கு என்ன காரணம் என்று ஆராய்ந்தோம். வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை புல்புல் புயலாக மாறியது. இந்த தாழ்வு நிலை மேலும், தாழ்வான நிலைக்கு வரும் போது சூரிய ஒளி முழுமையாக உள்ளே வர வாய்ப்பு இருக்காது.

அதே சமயம், கடற்காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். தரைப் பகுதிக்கு வரும் கடற்காற்றின் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இந்த காரணங்களினால், ஒரு வாரமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்தது.

சென்னையில் உள்ள மாசு கட்டுப்பாட்டு தர ஆய்வு மையங்களில், காற்றின் தரத்தின் புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வாகனங்கள் மற்றும் ஆலைகளில் இருந்து வெளியாகும் புகை காரணமாகவும் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.

சென்னையில் ஏற்பட்டிருக்கும் காற்று மாசால் யாருக்கும் எந்த உடல்நிலை பாதிப்பும் இல்லை. சளி தொந்தரவு, ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்களில், பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த காற்று மாசு, வட இந்தியாவில் இருந்து வரவில்லை. சமூக வலைத் தளங்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம், பீதியடைய வேண்டாம் என்றார்.