டில்லி:

ணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது என்று எச்சரித்த நீதிபதிகள் நெருப்புடன்  விளையாடாதீர்கள் என்றும் காட்டமாக கூறினர்.

தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் நீதிமன்ற ஊழியர் ஒருவர் கூறிய பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு அவர் பிரமாணப் பத்திரம் அனுப்பி இருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தன் மீது சுமத்தப்பட்டுள்ள  பாலியல் குற்றச்சாட்டால் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வேதனை அடைந்தார். இதை அவர் முற்றிலும் மறுத்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த 3 நீதிபதிகள் குழு  அமைக்கப்பட்டது.  நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் நீதிபதிகள் என்.வி.ரமணா, இந்திரா பானர்ஜி ஆகியோர் கொண்ட குழு  இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உள்ளது.

இதற்கிடையில்,இந்த வழக்கு தலைமை நீதிபதியை சிக்க வைக்க நடந்த சதி என்றும், அது தொடர்பாக தன்னை மர்மநபர் ஒருவர் சந்தித்து பேசியதாகவும், வழக்கறிஞர் உத்சவ் ஸ்பெய்னிஸ் வழக்கு தொடர்ந்து, அதற்கான ஆதாரங்களையும் சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதிகள் அருண் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு அமர்வு முன்பு விசாரணை நடைபெற்றது.  இந்த அமர்வில் நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், தீபக் குப்தா ஆகியோரும் இடம்பெற்று இருந்தனர். இந்த வழக்கு இன்று காலை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:-

தலைமை நீதிபதிக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு நெருப்புடன் விளையாடுவது போன்றது. பணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.

நீதித்துறை மீது கடந்த 3, 4 ஆண்டுகளாக இது போன்ற தாக்குதல்கள் நடந்து வருகின்றன. நீதித்துறை மீதான தாக்குதல் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நேரம் வந்துவிட்டது.

நீதித்துறை மீதான தாக்குதல் பின்னணியில் இருப்பவர்களை யார் என்று அடையாளம் காணுவது அவசியமாகும். இது தொடர்பாக புலனாய்வு குழு விசாரிக்கப்பட வேண்டும். என்று  நீதிபதிகள் காட்டமாக கூறினார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக புலனாய்வு குழு அமைப்பது குறித்து இன்று பிற்பகலில் உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.