சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது! மக்களவையில் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்

டில்லி:

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று  மக்களவையில் டி.ஆர்.பாலு குற்றம் சாட்டினார்.

சேலத்தில் செயல்பட்டு வரும் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்க மத்தியஅரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது உருக்காலையை நடத்தி வரும் மத்தியஅரசு நிறுவனமான செயில் (SAIL). உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதாக காரணம் கூறி, தனியாருக்கு கொடுக்க வலியுறுத்தி  வருகிறது.

இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது,  பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  மத்தியஅரசின் தனியார் மய அறிவிப்புக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுக்கப்பட்டு, அதை  அரசு முறியடியடித்ததாக கூறியவர்  இது தொடர்பாக,  அதிமுக, திமுக  நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து பிரதமரை சந்தித்து வலியுறுத்துவார்கள் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு இதுகுறித்து பேசினார். அப்போது,  சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும், சேலம் உருக்காலை போன்ற தொழிற்சாலைகளை தனியார் மயமாக்குவதை ஏற்று கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியவர்,  பூந்தமல்லி, வண்டலூர், அம்பத்தூர் வரை மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்க வேண்டும் என்றும்  கோரிக்கை வைத்துள்ளார்.