சென்னை

ரஜினிகாந்த் நடத்திய ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்ட விவரம்

வியாழக்கிழமை, ரஜினிகாந்த் பிரியமுடன் கும்பிடும் ராகவேந்திரா சாமியை வழிபடுவதற்கு உகந்த நாள்.

நேற்று வியாழக்கிழமை.

தனது ராகவேந்திரா திருமண ,மண்டபத்துக்கு ,ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசினார்.

காலை 10.30 மணிக்குக் கூட்டம் ஆரம்பம்.

90 நிமிடங்கள் சந்திப்பு நடந்தது.

ரஜினியைப் பார்க்க 500 முதல் 700 ரசிகர்கள் வரை மண்டபத்துக்கு வெளியே திரண்டிருந்தனர்.

12.15 மணி வாக்கில் கூட்டம் முடிந்து காரில் வீட்டுக்குக் கிளம்பிச் சென்றார் ,ரஜினி.

காரில் இருந்த படி ரசிகர்களுக்கு கை காட்டி விடை பெற்றார்.

ஊடகங்களிடம் அவரும் பேசவில்லை. கூட்டத்தில் கலந்து கொண்ட செயலாளர்களும் வாய் திறக்கவில்லை.

போயஸ் கார்டன் வீட்டு வாசலில் வழக்கம் போல் பேட்டி அளித்த ரஜினி,’’இன்றைய கூட்டத்தில் நிறைய விஷயங்களைப் பரிமாறிக்கொண்டோம்.அவர்களுக்கு மிகவும் திருப்தி.  ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் எனக்குத் திருப்தி இல்லை. ஏமாற்றம்.  அதை நேரம் வரும்போது சொல்கிறேன்’’ என்று கூறி விட்டு, வீட்டுக்குள் சென்று விட்டார்.

கூட்டத்தில் என்ன நடந்தது?

மொத்தம் 38 மாவட்டச் செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.அவர்களில் 8 பேருக்குப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

‘’ நாம் தனித்துப் போட்டியிட வேண்டும்.’’ என்று சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

‘’ கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும்’’ என்று பலர் வற்புறுத்தினர்.

அமைதியாகக் கேட்டுக்கொண்டார், ரஜினி.

நிறைவாக பேசிய ரஜினி, நிறைய வெடிகுண்டுகளைச் செயலாளர்கள் மீது வீசி எறிந்துள்ளார்.

‘’கட்சி ஆரம்பிக்க முடிவெடுத்துள்ள  நான், பல பொறுப்புகளை உங்களிடம் கொடுத்தேன்.  பல மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. மொத்தம் 65 ஆயிரம் வாக்குச்சாவடி பூத்களை அமைக்க உத்தரவிட்டேன். 55 ஆயிரம் பூத்கள் மட்டுமே  அமைக்கப்பட்டுள்ளன. உறுப்பினர் சேர்க்கையும் நான் எதிர்பார்த்த மாதிரி நடக்கவில்லை’’ எனக் கோபம் காட்டிய ரஜினி, அடுத்துப் பேசியது அதிர்ச்சி ரகம்.

‘’நான் முதல்-அமைச்சர் ஆக மாட்டேன். கட்சி மட்டுமே என கட்டுப்பாட்டில் இருக்கும்.அ.தி.மு.க., தி.மு.க.உள்ளிட்ட பல்வேறு  கட்சிகளில் இருந்து நமது கட்சியில் ஆட்கள் சேரப் போகிறார்கள். அவர்களுக்கு முக்கிய பொறுப்பு கொடுப்பேன்.’’என்று கூறி நிறுத்தியவர் ,கிளைமாக்சில் பேசிய ‘டயலாக்’ – – செயலாளர்களுக்குப் பேதி மருந்து ரகம்.

‘’நான் கட்சி ஆரம்பித்த பிறகு, நமது ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் பலர், இந்த பொறுப்பில் இருக்க மாட்டீர்கள். பெரிய மாற்றம் இருக்கும்’’  என்று கூறியதோடு’’ இங்குப் பேசப்பட்ட விஷயங்கள் நம்மோடு இருக்கட்டும். உங்கள் மனைவியிடம் கூட இங்கு நடந்த உரையாடலைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.இதை உறுதி மொழியாக எடுத்துக் கொள்ளுங்கள்’’  என்று  ஆணைப்பிறப்பித்து, கிளம்பி விட்டார் சூப்பர் ஸ்டார்.

-ஏழுமலை வெங்கடேசன்