பெங்களூரு

கொரோனா பரவுதலை தடுக்க ஐடி ஊழியர்களை வெளிநாடு அனுப்ப வேண்டாம் எனக் கர்நாடக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ஐடி நிறுவனங்களில் பணி புரிபவர்கள் பணி நிமித்தமாக வெளிநாடு சென்று அங்குத் தங்கி சில மாதங்கள் பணி புரிவது வழக்கமான ஒன்றாகும்.   அவ்வாறு பெங்களூருவில் வசிக்கும் ஒரு ஐடி ஊழியர் அமெரிக்கா சென்று வந்தார். அதன் பிறகு அவருக்கு உடல் நிலை ஸ்ரீயில்லாமல் போனதால் அவர் மருத்துவரை அணுகினார்   அவரைச் சோதித்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டது.

அதையொட்டி அவர் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.   மேலும் அவர் மனைவி மற்றும் மகள், அவருடைய வாகன ஓட்டுநர் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆகியோரும் தனிமைப் படுத்தப்பட்டனர்.  சோதனையில் ஐடி ஊழியர் மனைவிக்கும் மகளுக்கு கொரோனா தாக்குதல் உள்ளது தெரிய வந்துள்ளது.  இதன் மூலம் பெங்களூருவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “பெஙளூரு நகரத்தில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன.  எனவே ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர் இங்கு வருகின்றனர். அத்துடன் இங்கிருந்தும் ஏராளமான ஊழியர்கள் வெளிநாடு சென்று ஆன்சைட் எனப்படும் குறுகிய கால பணிகளை முடித்து விட்டு இங்கு வருகின்றனர்.

எனவே கர்நாடக அரசின் சுகாதாரத்துறை ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறது.   அத்துடன் சமீபத்தில் அதாவது  பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதிக்குப்  பிறகு வெளிநாடு சென்று வந்த ஐடி ஊழியர்கள் விவரங்களையும் அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அவர்களிடம் சோதனை நடத்த திட்டமிடபட்டுள்ள்து.   அத்துடன் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது” எனத் தெரிவித்தனர்.