விஜயபாஸ்கரை ஒதுக்க வேண்டாம் : விராலிமலை வாக்காளர் பகிரங்க கடிதம்

விராலிமலை

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்காமல் அவரை பயன்படுத்தக் கோரி அவருடைய விராலிமலை தொகுதி வேட்பாளர் பகிரங்க கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா குறித்து தினசரி செய்தியாளர் சந்திப்புக்களை நடத்தி வந்த சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கடந்த் சில நாட்களாக எந்த சந்திப்பிலும் பங்கு பெறுவதில்லை.  அவருக்குப் பதில் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் பங்கு பெற்று வருகிறார்.

இது குறித்து சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் விராலிமலை தொகுதி வாக்களர் ஒருவர் தமிழக முதல்வருக்கு  பகிரங்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.  அந்த கடிதம் தற்போது தமிழகமெங்கும் பலராலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த கடிதத்தில் காணப்படுவதாவது :

” மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு…கொரோனா  தடுப்பு நடவடிக்கைக்காக மீண்டும் 14 நாட்களுக்கு லாக் டவுன் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. கொரோனா பாதிப்பு மூன்றாவது நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக மத்திய -மாநில அரசுகள் தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழக அரசின் செயல்பாடுகளும் மிகச்சிறப்பாக உள்ளது என்று மத்திய அரசு பாராட்டியிருக்கிறது. அதனை நாங்களும் நேரிடையாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
இத்தகைய சூழ்நிலையில் அரசியல் காரணத்திற் காகவோ, அல்லது நிர்வாக காரணத்திற்காகவோ சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஒதுக்கிவைத்திருப்பது சரிதானா என்கிற மிகப்பெரிய கேள்வி விராலிமலை தொகுதி மக்களான எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கு  மட்டுமல்ல தமிழக மக்கள் மத்தியிலும் இக்கேள்வி எழுந்துள்ளது என்பது உண்மை.

காங்கிரஸ் தலைவர் அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோரெல்லாம் கேட்கிறார்கள் என்பதைக்கூட விட்டுவிடுங்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அனுபவம் மிக்க சுகாதாரத்துறை அமைச்சரை ஒதுக்கி வைத்திருப்பது சரியானதாக இருக்குமா என்று மருத்துவத்துறையினரே கேட்கின்றனர்.

கடந்த நான்கு வருடங்களாக சுகாதாரத்துறையில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் விஜயபாஸ்கர்தான் எடுத்தார். அதை நீங்கள் அங்கீகரித்துள்ளீர்கள். இவ்வளவு ஏன், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா முதல் குட்கா விவகாரம்வரை பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டதும் அவர்தான். அமைச்சரவையில் இருக்கிறார் என்பதற்காக அவருக்கு யாரும் உதவியதாகத் தெரியவில்லை. அவரைப்பிடித்தார், இவரைப்பிடித்தார் என யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், முதல்வராகிய உங்களுக்கு என்ன நடந்தது என்பது நன்றாகவே தெரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட எந்த விவகாரத்திலும், எந்த இடத்திலும் யாரையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை. தனக்கு யாரும் உதவவில்லை என்பதற்காக அவர் கோபித்துக் கொண்டதுமில்லை. அத்தனை பிரச்சினைகளையும் தாண்டி தமிழக அரசைத் தர்மசங்கடத்தில் தள்ளாமல் வெளியே வந்தாரா இல்லையா? இத்தனை சிக்கல்களையும் சமாளித்தவரை ஏற்றுக்கொண்டுதானே அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்று அழகுபார்த்தீர்கள். இத்தகைய சூழ்நிலையில் திடீரென கடந்த 10 நாட்களாக எங்கள் அமைச்சரை ஒதுக்கிவிட்டீர்கள்.

அவரை ஒதுக்க இது சரியான நேரமா என்பதை தயவுசெய்து சிந்திக்க வேண்டுகிறேன்.  சுகாதாரத்துறையில் உள்ள தடுமாற்றங்கள் என்னென்ன என்பது எனக்குத் தெரியாது. வெளியில் நடப்பதை நாங்கள் நேரடியாகப் பார்க்கிறோம். கரோனா குறித்த செய்தியாளர் சந்திப்பை அமைச்சருக்குப் பிறகு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நடத்தினார். என்ன காரணத்தினாலோ திடீரென அவர் அமைதியாய் அருகில் அமர்ந்திருக்க இப்போது தலைமைச் செயலாளர் சண்முகம் நடத்தி வருகிறார். ஆனால், இரண்டுபேரின் சந்திப்பும் விஜயபாஸ்கரின் சந்திப்பு போல இல்லை என்கின்றனர் சென்னை பத்திரிகையாளர்கள்.

இதற்கு உதாரணம், ரேபிட் கிட் விவகாரம். சில நாட்களுக்கு முன் செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், ரேபிட் கிட் மிகவும் அவசியம். அது வந்துவிட்டால் ஒரேநேரத்தில் லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யமுடியும். முடிவு அரை மணிநேரத்தில் தெரிந்துவிடும். இன்று இரவு ஐம்பதாயிரம் ரேபிட் கிட் வந்துவிடும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளரோ ரேபிட் கிட் சோதனை சாதாரணமானதுதான், பிசிஆர் சோதனைதான் சரியானது என்று கூறி சமாளித்தார். ரேபிட் கிட்டும் வரவில்லை.

ஏன் இந்த தடுமாற்றம்?

எங்கள் அமைச்சர் விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், என்ன பிரச்சினையாக இருந்தாலும் அவற்றைத் தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு டாக்டர் விஜயபாஸ்கரின் அனுபவத்தையும், சுறுசுறுப்பையும் இந்தநேரத்தில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். கொரோனாவை விரட்டுங்கள், வாழ்த்துக்கள்.” என எழுதப்பட்டுள்ளது.